பக்கம்:தைத் திங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணும் பொங்கல்


பால் பொங்கிற்றா?

தை மூன்றாம் நாள் காணும்பொங்கல் விழா நடை பெறும். சோதிட முறையில் இது கரிநாள்' என வழங்கப்பெறும், காணும் பொங்கலன்று ஒருவரை யொருவர் கண்டு'பால் பொங்கிற்றா' என நலங்கேட்டு அளவளாவுவர். நண்பர்களும் உறவினர்களும் ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்வர்;வந்தவரை வீட்டுக்காரர் வரவேற்றுப் போற்றுவர்; தாம்பூலம் அளிப்பர்; சிற்றுண்டி விருந்தோ பேருண்டி விருந்தோ செய்வதும் உண்டு. வந்தவர் வயதில் சிறியவராயின் பணமும் கொடுப்பர். சிறியவர்கள் பெரியவர் காலில் விழுந்து வணங்கித் தாம்பூலத்துடன் பணமும் பெறுவர். பெரியோரின் வாழ்த்தும் வந்தவரைக் குளிரச் செய்யும்.

காணும் பொங்கல் வடதமிழ் நாட்டிலே மிகுதியாகக் காணப்படுகிறது, எனவே, இப்பகுதியில் நடைபெறும் முறைகளையொட்டிக் காணும் பொங்கல் ஈண்டு விவரிக்கப்படும்.

வரிசை வழங்குதல்:

காணும் பொங்கலன்று நண்பர்களும் உறவினர்களும் போவதன்றி, தொழிலாளர்களும் கலைஞர்களும் ஏழை யெளியவர்களும் இரவலர்களும் வந்து வரிசை பெற்றுச் செல்வது மிகுதியாய் நடைபெறும். குடும்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/68&oldid=1323706" இலிருந்து மீள்விக்கப்பட்டது