பக்கம்:தைத் திங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

69


படும். இப்போது வடலூர் தைப் பூச விழாவிற்குப் பெயர் பெற்ற ஒரு மைய நிலையமாக இருப்பது நாடறிந்ததே!

இரத சப்தமி:

சப்தமி என்னும் வடமொழிச் சொல். அமாவாசை அல்லது பருவம் கழிந்த ஏழாம் நாளைக் (திதியைக்) குறிக்கும். தைத் திங்களில் வளர் பிறையில்-அமாவாசை கழிந்த ஏழாம் நாள் இரத சப்தமி எனப்படும், தைத் திங்களிலிருந்து கதிரவன் வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறான். இந்த வட செலவு வடமொழியில் 'உத்தராயணம்' எனப்படுகிறது. ஞாயிறு இர தத்தில் (தேரில்) செல்வதாகக் கூறுவது மரபு. ஞாயிற்றின் இரதம் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவது இந்த சப்தமி நாளில்தானாம்; அதனால் இது இரத சப்தமி' எனப்படுகிறது. புராண முறைப்படி இது 'புண்ணிய நாள்' என்று நம்பப்படுகிறது. எனவே, ஒரு சிலர் இதனைச் சிறுபொங்கல் போலக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் வைகறையில் நீராடிச் சிறிய விளக்குகள் ஏற்றித் தண்ணீரில் மிதக்கவிட வேண்டும் எனவும், தேரில் ஞாயிறு அமர்ந்து செல்வதுபோல் வடிவம் அமைத்து வைத்து வழிபாடாற்ற வேண்டும் எனவும் புராணங்களில் புகலப்பட்டுள்ளது. இந்த முறையைப் பின்பற்றுபவர் ஏழு எருக்கிலைகளைத் தலையில் வைத்தபடி கதிரவன் புறப்படும் போது நீராடுகின்றனர்; இன்னும் சில சடங்கு முறைகளைச் செய்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/86&oldid=1323668" இலிருந்து மீள்விக்கப்பட்டது