பக்கம்:தைத் திங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

73


என்னும் பொருளில், 'தைத் திங்கள் தண்பெயல் கடைநாள்' எனச் சங்க நூல்களில் கூறப்பட்டிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. மழை நின்று விடவே, பழுதுபட்ட இல்லங்களை-விழுந்துபோன வீடுகளை மக்கள் மீண்டும் புதுப்பிக்கலாயினர். அறுவடை வீடு வந்து சேர்ந்தது. பொங்கல் தொடங்கிற்று. பசி, வறுமை, பிணி நீங்கத் தொடங்கின. தானியங்களை விற்றுக் கடன் தீர்க்கப்படடது. பல்வேறு விழாக்களாலும் மங்கல நிகழ்ச்சிகளாலும் பகை நீங்க ஊரில் ஒருவர்க்கொருவர் ஒற்றுமை ஏற்பட்டது. தொழில்கள் தொடங்கப்பட்டன. துயரங்களும் சிக்கல்களும் நீங்க மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இவ்வாறாகத் தை பிறந்ததும் எல்லாருக்கும் வழி பிறந்தது-எல்லா வற்றிற்கும் வழி பிறந்தது. இம்மட்டுமா?

திருமண விழா:

கன்னி கழியாதிருந்த இல்லங்கள் தை பிறந்ததும் திருமண ஆயத்தங்கள் பெற்றுத் திருமண அரங்குகளாக மாறலாயின. நல்ல கணவனை வேண்டி நோன்பிருந்த கன்னி கண் நிறைந்த கணவனை மணந்து மனம்போல மங்கலம் பெற்றாள். ஒண்டிக் கட்டையாக இருந்த கட்டிளங் காளை வாழ்க்கைத் துணைநலம் பெற்றான், பெண்ணுக்கு இன்னும் கன்னிப் பூ பூக்கவில்லையே எனவும், பிள்ளைக்கு இன்னும் விளக்கேற்றி வைக்க வில்லையே எனவும் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த இருதரப்புப் பெற்றோர்களின் உள்ளங்கள் மகிழ்ச்சியால் மலரலாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/90&oldid=1323674" இலிருந்து மீள்விக்கப்பட்டது