பக்கம்:தைத் திங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 தைத் திங்கள்


ஆம்! தமிழர்கள் ஆவணித் திங்களோடு திருமண நிகழ்ச்சியை நிறுத்தி வைத்துவிடுவர், ஆவணியிலேயே கூட திருமணத்தின்போது மழையினால் அல்லல்பட்டு அலுத்துப்போன மக்கள், புரட்டாசி.ஐப்பசி கார்த்திகை மார்கழி ஆகிய திங்கள்களில் திருமணத்தை மறந்திருப்பது இயற்கைதானே! எனவேதான், திருமணத்திற்கும் வழி பிறக்கத் தை பிறக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலத்தில் எல்லாத் திங்கள்களிலும் திருமணம் நடைபெறுகிற சூழ்நிலை வேறு-அந்தக் காலத்துச் சூழ்நிலை வேறு.இந்தக் கால வசதி அந்தக் காலத்தில் இல்லை.

இந்தக் காலத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளை தேடுகின்றனர். அந்தக் காலத்தில் மாப்பிள்ளை வீட்டார் பெண் தேடுவதே தமிழர்மரபு,நெருங்கிய உறவின் முறையாருக்குள்ளேயே பெண் வீட்டார் எளிதில் முடிவுதர மாட்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் பலமுறை கெஞ்சும் சூழ்நிலை இருக்கும். பெண் பார்க்கப்போய் பதினேழு இணை செருப்பு தேய்ந்ததாக அந்தக் காலத்தில் சொல்வது வழக்கம். இந்தக் காலத்தில் மாப்பிள்ளை பார்க்கப் போய் இருபத்தேழு இணை செருப்பு பெண் வீட்டார்க்குத் தேயும் சூழ் நிலையைக் காண்கிறோம்.

மாப்பிள்ளையின் தந்தை மகனுக்குத் தைத் திங்களில் மைத்துனர் மகளை மணம் செய்து வைக்க வேண்டுமென விரும்பினால், இரண்டு மூன்றுதிங்களுக்கு முன்பே மைத்துனரிடம் பெண் கேட்டுப் பார்ப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/91&oldid=1323676" இலிருந்து மீள்விக்கப்பட்டது