பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தொண்டரடிப்பொடியாழ்வார்

போல் தேவதேவி வேஷம் போட ஆரம்பித்தாள். அவள் ஒரு தவமடந்தை போல் நடந்து கொண்டாள். ஸதா பகவானது நாமங்களையே அவளுடையவாய் உச்சரித்துக்கொண்டிருக்கும். விப்ரநாராயணர் படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்கு முன்னமே அவள் எழுந்திருப்பாள். உடனே அவள் அத்தோட்டத்திலிருந்த செடி கொடிகளைப்பார்த்து அவற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சுவாள். விப்ரநாராயணரைக் கண்டபோது தூரத்தில் நின்றபடியே அவரை வணங்கி நமஸ்கரிப்பாள். அவர் ஏவாமலே அவருக்குச் செய்யக்கூடிய பணிகளைச் செய்வாள். அவளே அச்செடிகளை ஆராய்ந்து, மலர்களைக்கொய்து அழகிய மாலைக் ளாய்க்கட்டி அவர் நடமாடும் இடத்தில் வைத்துவிடுவாள்.

இப்படிச் சில தினங்கள் கழிந்தன. மறையவர் அம் மாதின் குணங்களைக்கண்டு வியந்து அவளை ஒருநாள் அழைத்து, ‘நீ யார்? நீ இங்கிருப்பதற்குக் காரணம் என்ன?’ என்று வினவினார்.

தேவதேவி வெகு மர்யாதையோடும் விப்ரரை நோக்கி, “ஸ்வாமி! அடியேன் முன் ஜன்மத்தில் செய்தபாபத்தால் மஹா இழிவான குலத்தில் பிறந்தேன். தாஸிக்குலத்தில் பிறந்த என்னை என் பெற்றோர் என் குலத்தொழிலை நானும் கைக்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். என்மனமோ அவ்விழிவான கார்யத்தில் சிறிதும் செல்லவில்லை. உலகத்தாரை ஏமாற்றிப் பிழைக்க நான் விரும்பவில்லை. தேவரீரைப்போன்ற மஹான்களை அடுத்துக் கைங்கர்யம் புரிந்து கடைத்தேறலா மென்று விரும்புகிறேன். நான் கதியற்றவள். எப்படியாவது நற்கதி அடைய வேண்டு மென்னும் எண்ணம் மாத்ரம் எனக்கு உண்டு. இவ்வேழை மீது தேவரீர் அருள் புரிந்தால் அடியாள் உய்வதற்கு வழியுண்டு. இன்றேல், நான் இறத்தலே மேல்.