பக்கம்:தொண்டரடிப்பொடியாழ்வார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தொண்டாடிப்பொடியாழ்வார்

வாவிகளும் கவிகளின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் தன்மையனவாயிருந்தன. அச்சோழ நாட்டிலே திருமண்டங்குடி என்னும் பெயர் வாய்ந்த பட்டண மொன்று உண்டு. அதில் அறிவு நிறைந்த கல்விமான்களும், கடவுளிடத்திலும் அடியவரிடத்திலும் பக்தியோடு விளங்கிய சான்றோர்களும் நிறைந்திருந்தார்கள். அவ்வழகிய திருநகரிலே எல்லா வர்ணத்தாரும் நத்தம் கடமைகளை வழுவாது செய்துவந்தார்கள். ஜனங்கள் உள்ளதைக் கொண்டு த்ருப்தியோடும் ஸந்தோஷத்தோடும் காலம் கழித்துவந்தார்கள்.

திருமண்டங்குடியில் ஒரு வேதியர் வஸித்துவந்தார். அவர் வேதம் முதலிய அறநூல்களை நன்றாய் அறிந்தவர். வைதிக ஒழுக்கங்களிற் சிறிதும் பிறழாதவர். அவருக்குத் திருமாலிடத்தும் திருமாலடியார்களாகிய வைஷ்ணவரிடத்தும் விசேஷ பக்தி மிகுந்திருந்தது.

கருணைக் கடலான எம்பெருமான் அவ்வேதியரின் சீலத்தையும் பக்தியையும் கண்டுகளித்து அவருக்கு ஓர் அழகிய குழந்தையை அருள்புரிந்தார். பகவானது கடாக்ஷத்தாற் பிறந்த அக்குழந்தையின் வனப்பையும், முகக்காந்தியையுங் கண்டு அதிசயித்த பெற்றோர்கள் அதற்கு விப்ரநாராயணன் என்று பெயரிட்டார்கள். அக்குழந்தை ஜனித்த தினம் மஹா மஹிமையோடுங்கூடிய ஒரு சுப தினம். மாதங்களிற் சிறந்தது மார்கழி மாதம்; ஏனெனில் அது பகவானது அம்சமாகக் க்ருஷ்ண பரமாத்மா அருளிச் செய்த ஸ்ரீ கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் பெருமை வாய்ந்துள்ள மார்கழி மாதத்திலே கேட்டை நக்ஷத்ரங்கூடிய சுபதினத்திலே விப்ரநாராயணர் அவதரித்தார்.