பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

குன்றில் தக்கானுக்கும் மிக்கானாக விளங்கும் யோக ஆஞ்சநேயர் திருக்கோயில் கொண்டிருக்கும் மலையை நோக்கி நடக்கின் றோம். அந்தக் குன்றினையுடைய அடிவாரத்தில் சிறிது தூரம் நடந்து சுமார் 200 அடி உயரமுள்ள மலையில் படிகளின் வழியே ஏறிப்போதல் வேண்டும். இந்த மலையிலுள்ள படிகள் புதுப்பிக்கப்பெறவில்லை. ‘கவிநாயகனின் பிரதான வாயிலும் வடக்கு நோக்கியே அமைக்கப் பெற்றுள்ளது. ஆயினும், கோயிலினுள் அவனது சந்நிதி மேற்கு நோக்கிய வண்ணம் உள்ளது. தம்முடைய நாயகனாகிய நரசிம்மனை எதிர் நோக்கிய வண்ணம், தம்முடைய வீர உணர்ச்சியை யெல்லாம் உள்ள டக்கிக் கொண்டு, தமது தலைவனைப் போலவே யோக நிலையில் எழுந்தருளியுள்ளார் இராமதுரதர். யோக நிலையிலுள்ள அஞ்சனை மைந்தனை இத்தலத்தைத் தவிர பிற இடங்களில் காண்டல் அரிது என்று சொல்லுகின்றனர்.

இந்த யோக மூர்த்தியைப் பற்றிய ஒரு புராண வரலாறு உண்டு; ஒரு சமயம் இந்திரத்துய்மன் என்ற அரசன் வடமதுரையை ஆண்டுவந்தான். ஒரு நாள் வேட்டையாடிய அவன் ஒரு மானைக் கண்டு அம்பும் கையுமாக அதனைப் பின்தொடர்ந்து மான் கணங்கள் இருக்கும் இடத்தை வந்தடைந்தான். மன்னனைக் கண்ட மான் கணங்கள் மருண்டு புல்மேய்தலை மறந்து, மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர, அசையாத பதுமைகள் போல் திகைத்து நின்றன. அந்நிலையைக் கண்ட அரசன் அம்பெய்யச் சிறிது தயங்கி நின்றான். அவ்வளவில் ஒரு பெண்மான் ‘அம்பெய்ய வேண்டாம்’ என்று இறைஞ்சி வேண்டியது. அரசன் தன் செயல்மீது வெறுப்புற்று ‘இனி வேட்டைமெற் செல்லுவதில்லை’ என்று உறுதி கூறித் தன் நாடு திரும்பினான். பின்னர் ஒரு சமயம் கும்போதரன் என்ற அரக்கனுடைய கொடுமையையும் அவன் ஒழித்து இப்பகுதி மக்களைக் காப்பாற்றினான். இப்போருக்கு இந்திரன் தன் வச்சிராயுதத்தையும் தேரையும் அரசனுக்கு வழங்கினான். மற்ற தேவர்கள் அவனுக்கு வேண்டிய ஆயுதங்களையும் சேனைகளையும் தந்தனர். அவ்வளவில் யோக நரசிம்மனின் ஆணையால் ஆஞ்சநேயரும் நான்கு புயங்களுடன் சங்கும் ஆழியும் தரித்துக் கொண்டு அந்த அரசனுக்கு உதவியுள்ளார்; பின்னர் இந்த நிகழ்ச்சியின் நினைவாக சின்ன மலையில் கோயில்கொண்டு இன்றும் நமக்கு அதே நிலையில் சேவை சாதிக்கின்றார்.