பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நின்றவூர் நித்திலம்

இராஜ சிம்மன் என்றும் பல்லவ அரசன் மிகுந்த சிவபக்தியுடைவன். சுமார் 1250 ஆண்டுகட்கு முன்னர்க் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு அரசோச்சியவன்; இன்று நீலப்பலகையின் (Blue Board) ஆதரவில் பாதுகாக்கப்பெறும் கைலாச நாதர் கோயிலைக் கட்டியவன். அவன் திருப்பணி தொடங்கிய அன்றே பூசலார் நாயனார் என்பவர் ஒரு கோயில் அமைக்க எண்ணினார். வெறும் கை முழம் போடுமா? கையில் ‘வெள்ளையப்பன்’ இல்லாது எப்படிக் கோயில் எழுப்புவது? மானசக் கோயில் ஒன்று எழுப்புகின்றார் தம்மனத்தகத்தில். ‘இமைப்பொழுதும், என் நெஞ்சில் நீங்காதான்தான் வாழ்க’ என்று மணிவாசகர் குறிப்பிடும் ஆண்டவனுக்கு அவன் இருக்கும் இடத்திலேயே கோயிலை எழுப்பிய பெருமை பூசலார் ஒருவருக்கே உண்டு. ‘உள்ளுவார் உள்ளத்தாய்’ என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடும் அந்தர்யாமித்துவத்திற்குக் கோயில் எழுப்பியதாக வைணவ சமயத்தில் வரலாறு ஒன்றும் இல்லை. காடவர்கோன் காஞ்சியில் அமைத்த கற்றளி வேலையும் பூசலார் ‘நெடிதுநாள் நினைந்து செய்த ‘சிந்தை ஆலயத்’ திருப்பணியும் ஒரே நாளில் நிறைவு பெறுகின்றன. இலிங்கப் பிரதிட்டை செய்து குடமுழுக்கு விழா நடைபெற நாளையும் குறிப்பிடுகின்றான் பல்லவமன்னன். அன்று இரவில் சிவபெருமான் அரசனது கனவில் தோன்றி,

“நின்றவூர்ப் பூசல் அன்பன்

நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து

நாளைநாம் புகுவோம்; நீயிங்(கு) ஒன்றிய செயலை நாளை

ஒழிந்துபின் கொள்வாய்’

1. திருவா - சிவபுராணம் - அடி- 2. 2. திருநெடுந் - 8. 3. பெரியபுரா : பூசலார் நாயனார் புராணம் - 10.