பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தொண்டை நாட்டுத்திருப்பதிகள்

இக்கோயிலில் ஒரு சம்பிரதாயம் நிலவிவருகின்றது; பார்த்தசாரதியைத் தரிசிப்பதற்கு முன்னரே திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஏனையவர்களையெல்லாம் சேவித்து விடவேண்டும் என்பதுவே அந்த ஐதிகம். ஆகவே, பார்த்த சாரதியை வலம்வரும் நிலையில் புறப்படுகின்றோம். சந்நிதி வாயிலினின்றும் தென்புறமாகத் திரும்பியதும் முதலில் நமக்குச் சேவை சாதிப்பவர் வேதவல்லித் தாயார். இவரைப்பற்றி வரலாறு ஒன்று உண்டு. ஒரு காலத்தில் திருவல்லிக்கேணிப் பகுதி துளசிச் செடிகள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. ஒரு சமயம் ஸ்ரீமந் நாராயணனுடன் ‘அகலகில்லேன் இறையும்’ என்று கிடக்கும் பெரிய பிராட்டியார் ஒரு சிறு கலகம் காரணமாகத் திருமாலை விட்டுப் பிரிந்து பிருந்தாரண்யம் (துளசிவனம்) என்று வழங்கும் திருஅல்லிக்கேணிக் கரையில் ஒரு சந்தன மரத்தடியில் ஒரு பெண் குழவி வடிவத்துடன் கிடக்கின்றார். அப்போது அங்குத் தவம்புரிந்து கொண்டிருந்த பிருகு முனிவர் அக்குழந்தையை எடுத்து ‘வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றார். எம்பெருமான் ஒர் அரசகுமரன் வடிவத்தில் எழுந்தருளி மங்கைப் பருவம் எய்தியிருந்த வேதவல்லியைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொள்ளுகின்றார். பின்னர் இவர் இங்கேயே தங்கிவிட்டதாகப் புராண வரலாறு. வேதவல்லித் தாயார் சர்வாங்கசுந்தரி. இவரை மனமாரச் சேவிக்கின்றோம்.

அடுத்து நம்மை ஆட்கொள்ள இருப்பவர் கருடன் மீது எழுந்தருளியிருக்கும் வரதராசர். அவருடைய சந்நிதிக்கு வந்ததும் திருமங்கையாழ்வாரின்,

மீன்அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்

வேட்கையி னோடுசென்(று) இழிந்த கான்அமர் வேழம் கைஎடுத்து அலற,

கராஅதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப்புள் ஊர்ந்து

சென்றுநின்(று) அழிதொட் டானை, தேன்அமர் சோலை மாடமாமயிலைத்

திருவல்லிக் கேணிக்கண் டேனே”

(பொய்கை-தடாகம்; நாள்மலர்-புதிய பூ வேட்கையோடு-ஆகையோடு: இழிந்த இறங்கின; வேழம்-யானை (கஜேந்திரன்): கை-துதிக்கை; அலற கூச்சலிட, கரா -முதலை; கதுவ-கெளவிக்கொள்ள புள்-(இங்கு) கருடன், ஆழி-சக்கரம்)

8. திருவாய் . 6. 10:10 9. பெரி. திரு. 2.3:9.