பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. கடல்மல்லைக் கிடக்கும் கரும்பு

தெய்விக வாழ்க்கை வாழ்ந்த மக்களின் பேச்சுக்கே ஒரு தனியான வேகம் உண்டு. அவர்களுடைய உபதேச மொழி களுக்கு உள்ள ஆற்றல் வெறும் படிப்பும் அறிவும் படைத்தவர் களின் அறவுரைக்கு இருப்பதில்லை. அத்தகைய முனிபுங் கவர்கள் பேசும்போது அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் பேசுகின்றது. பழங்காலத்து முனிவர்களைப் போன்றவர் நம்முடைய காலத்தில் வாழ்ந்த இராமகிருஷ்ணர். அவர் நூல் ஒன்றும் எழுத வில்லை; சொற்பொழிவும் செய்யவில்லை. துய்மையான துறவியாக வாழ்ந்து மறைந்த பெரியார் அவர். பக்தியுடன் தம் அருகில் அமர்ந்து கேட்ட சீடர்களுடன் பேசிய பேச்சே அவருடைய அருள் மொழிகள்; திருமொழிகள். அப்படி அவர் பேசியவற்றைக் கேட்ட சீடர்கள் பிறகு அந்தத் திருமொழிகளை எழுதி வைத்துள்ளனர்.

ஒரு சம்யம் பகவான் இராமகிருஷ்ணர் இவ்வாறு சொன்னார்: ‘பசு பால் தருகின்றது. இந்தப் பால் பசுவின் உடலில் ஒடும் குருதியில் கலந்து அதன் உடல் முழுவதுமே உள்ளது. ஆயினும், பசுவின் காதைப் பிழிந்தால் பால் வருமா? வராது. பசுவின் மடியிலுள்ள காம்புகளில்தான் பால் சுரக்கும். உலகமெல்லாம் கடவுள் என்பது உண்மையே. ஆயினும் பசுவின் உடலில் பால் சுரக்கும் மடியைப் போன்றது திவ்விய தேசங்களின் மகிமை. அங்கே பக்தர்கள் சென்று, அந்தத் தலங்களில் சுரக்கும் பக்தியைப் பெற்று, பகவானை அடை கின்றனர். தலைமுறை தலைமுறையாகப் பலப்பல பக்தர்கள் தவமும் தியானமும் செய்த அந்தத் திருத்தலங்களில் ஆண்டவன் தன் தரிசனத்தை எளிதில் கிட்டும்படி செய்கின்றான். எண்ணற்ற பக்தர்களுடைய தவம், செபம், தியானம், பூசை, பிரார்த்தனை இவற்றின் ஒளி அங்கே படிந்து கிடக்கின்றது. அஃது அவ்விடம் பக்தியுடன் செல்லும் மக்களின் உணர்ச்சியைத் தன் மயமாக்கும்.