பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/50

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

என்று ஆழ்வார் நாயகி கூறுகின்றாள். ஈண்டும் எம்பெருமானே பதில் தருகின்றான். இதற்கு இன்சுவை மிக்க பெரியவாச்சான் பிள்ளையின் உரை அறியத்தக்கது. “கழஞ்சுமண் இரந்து வந்தவனல்லேன்; உன்னை இரந்து வந்தவன் நானென்கிறார்: பிறர்க்காக இரந்தவனல்லேன்; எனக்காக இரந்தவன் என்கின்றார்’ என்ற உரைப்பகுதி பன்முறை படித்து அநுபவித்து உளங்கொள்ளத் தக்கது.

கண்ணனாகச் சேவை : மேற்கண்ட காட்சி மறைந்து வேறொரு முறையில் காட்சி தருகின்றான் எம்பெருமான். கண்ணபிரானுடைய சிறுக்சேவகமும் திருமேனியழகும் தோன்றுமாறு எட்டுப்புயங்களிலும் எட்டுவித ஆயுதங்களைத் தாங்கிய நிலையில் சேவை பாலிக்கின்றான். இக்காட்சியைக் காட்டும் ஆழ்வாரின் சொல்லோவியம்:

“செம்பொன் இலங்கு வலங்கைவாளி,
          திண்சிலை, தண்டொடு சங்கம்,ஒள்வாள்,
உம்பர் இருசுடர் ஆழியோடு
          கேடகம் ஒண்மலர் பற்றி,எற்றே!
வெம்பு சினத்(து)அடல் வேழம் வீழ,
          வெண்மருப் பொன்றுபறித்(து), இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்?என்ன,
          அட்டபுயகரத் தேன்என் றாரே.”[1]

(வாளி-அம்பு : சிலை-வில்; தண்டு-கதை; சங்கம்-திருச்சங்கு; வாள்-கத்தி; உம்பர்-மேற்பட்டு; ஆழி-சக்கரம்; கேடகம்-கேடயம்; ஒண்-அழகிய; பற்றி-தரித்துக்கொண்டு; வெம்பு சினம்-மிக்க கோபம்; அடல்-மிடுக்கு மருப்பு-கொம்பு அம்புதம்-மேகம் (நீரைக் கொடுப்பது என்ற காரணப் பெயர்)

இங்குக் குறிப்பிட்ட எட்டுத் திவ்வியாயுதங்களையும் திருவுள்ளம் பற்றியே பேயாழ்வார் “தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்” என்று குறிப்பிட்டனரோ என்று எண்ணுகின்றோம். மலர்மன்மதனுக்கு ஆயுதமாதலால், ஈண்டு மலரும் ஆயுத வரிசையில் கொள்ளப்பட்டதை எண்ணுகின்றோம். எதிரிகளை வெல்வதற்கு ஆயுதங்களும் தன்னைப்போன்ற சிறுமிகளை வசப்படுத்துவதற்கு மலரும் கொண்டு சேவை சாதிக்கின்றான் எம்பெருமான் என்பது ஆழ்வார் நாயகியின் நினைப்பு.

  1. மேலது - 2.8:3