பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உலகளந்த பெருமாள்

எம்பெருமான் திருவடிகளையே சரணமாகக் கொண்ட வர்கள் ஆழ்வார் பெருமக்கள். ஆழ்வார்களில் தலை சிறந்தவரான நம்மாழ்வார் ‘பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான், கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைக் காண்கின்றோம். இவரே பிறிதோர் இடத்தில் ‘கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே’’’ என்று அத்திருவடிகளைத் தலையணியாகக் கொண்டதாகக் கூறு கின்றார். உலகளந்த காலத்தில் நல்லார் - பொல்லார், பாவிகள் - உத்தமர் என்று வேறுபாடு காட்டாமல் எல்லார் தலையிலும் பொருந்தி அவர்கட்கு வீடுபேறு அளித்த திருவடிகளன்றோ இவைகள்? உலக சாரங்க முனிவரின் திருத்தோள்களில் வீற்றிருந்த வண்ணம் அழகிய மணவாளனைச் சேவித்தபொழுது இத்திருவடிகளன்றோ முதன் முதலாகத் திருப்பாணாழ்வாரின் கண்ணில் பட்டவை? ‘நீள்மதிள் அரங்கத்து அம்மான் திருக் கமலபாதம் வந்து என் கண்ணிலுள்ளன. ஒக்கின்றதே’ என்பதால் பெரிய பெருமாளின் திருவடிகளின் அழகு அவர்மேல் விழுந்து அவர்தம்மைப் பரவசமாக்கியதைக் காண்கின்றோம். காஞ்சி ஞானப்பிரகாசர் திருமடத்திலிருந்த வண்ணம் இங்ஙனம் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில்,

“அடிமூன்றில் இவ்வுலகம் அன்றுஅளந்தாய் போலும் அடிமூன்று இரந்து அவனிகொண்டாய்; படிநின்ற நீர்ஓத மேனி நெடுமாலே நின்அடியை யார்ஓத வல்லார் அறிந்து’

(அடி-திருவடி, அளந்தாய் போலும்-அளந்து கொள்பவன்போல; அவனி - பூமி இரந்து-யாசித்து: அறிந்து-நன்கு தெரிந்து, ஒதவல்லார்-பேசவல்லவர்கள்)

1. திருவாய். 5.8:11 2. மேலது.-4.3:6 3. அமலனாதி - 1 4. இரண். திருவந்-5