பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

இந்தப் பாசுரத்தில் பவளவண்ணா என்பதற்குப் பவளம்போல் விரும்பத் தக்கதான வடிவு படைத்தவனே’ என்பதே பொருளாகத் தோன்றுகின்றது. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்திலும் இப்படித்தான் காணப்படுகின்றது. எனினும், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் ‘திருப்பவளவண்ணம் என்னும் திருப்பதியில் உறைபவனே!” என்றே பொருளாகக் கொண்டுள்ளார்கள். பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பராசரபட்டர் திருவடிகளில் பணிந்துய்ந்தவருமான திவ்விய கவியின் திருவுள்ளத்தைத் தழுவியே இங்ஙனம் கூறுகின்றார்கள். நாமும் அதனை ஒப்புக்கொண்டு அத்திருப்பதி எம்பெருமானைச் சேவிக்க வருகின்றோம்.

இந்த எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுகமண்டலத்தோடு சேவை சாதிக்கின்றான். பவளவண்ணன் என்பது எம்பெருமானின் திருநாமம். தாயார் பவளவல்லி நாச்சியார். இவரைச் சேவிக்கும்போது,

‘பவள வண்ணா ! எங்குற்றாய்? எம்பெருமான் உன்னை நாடி

ஏழையேன் இங்ஙனமே உழிதர் கேனே’

என்று கூறிச் சேவிக்கின்றோம். ‘எனக்கு முன்னால் உள்ள ஆழ்வார் பெருமக்களுக்கும் அகப்படாதவனே! உன்னை நாடி நான் அலைகின்றேன்’ என்ற திருமங்கை மன்னன் ப்ெறற உணர்ச்சியை நாமும் பெற்றதாக எண்ணிய வண்ணம் வழிபடுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் பாசுரமும் நம் சிந்தையில் எழுகின்றது.

“கண்டுஅறிந்தும், கேட்டுஅறிந்தும், தொட்டுஅறிந்தும், காதலால், உண்டுஅறிந்தும், மோந்துஅறிந்தும், உய்யேனே-பண்டைத் தவளவண்ணா! கார்வண்ணா! சாமவண்ணா! கச்சிப் பவளவண்ணா! நின்பொற் பதம்.”

(பண்டை-கிருதயுகம்; தவளம்-பால்; கார்-மேகம்; சாமளம்-பச்சை நிறம்: பவளம் - சிவப்பு: பொன் பதம் அழகிய திருவடிகள்)

38. நூற். திருப். அந் - 86