பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

72



இரண்டு. வாழ்நாள் அதிகமாகக் கூடிக்கொண்டது. நீண்ட நாட்கள் நலமுடன் வாழ உதவியது.

உடலுக்கு ஒரு வித மாயசக்தி உண்டு. தனக்கு வருகின்ற நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் மகோன்னத சக்தி, வருகிற நோய் எந்த விதமான வேகம் கொண்டதாக விளங்கினாலும், அதன் வேகத்தைக் கீழிறக்கி, உடலை இயற்கையான சமநிலையில் இயங்கச் செய்து கொள்ளும் சக்தி. அத்தகைய அரிய சக்தியை இந்த உண்ணா விரதம் உசுப்பிவிடுகிறது. உயர்த்தி விடுகிறது.

எப்படி முடிகிறது?

உண்ணா விரதத்தை விட இயற்கையான மருந்து இந்த உலகில் இல்லையென்கிறார்கள். அப்படி அடித்துப் பேச ஆதார சக்தி எப்படி எங்கே கிடைக்கிறது?

உண்ணாவிரதம் என்பது குழப்பமில்லாத ஒன்று கட்டாயம், பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் கிடையாது. மிகவும் பத்திரமான மருந்து, பவித்தரமான மருந்து.

ஆமாம். உண்ணா விரதம் இருந்தால், உடல் இலேசாக மாறுகிறது. தேகமோ தூய்மையடைகிறது. மனதிலும் மூளை வளத்திலும் பிரகாசம் அதிகரிக்கிறது. அத்துடன் தூய்மையான தோல், தெளிவான பார்வை, திருப்தியான ஜீரணசக்தி கிடைப்பதுடன், பிடிப்பு, படபடப்பு. பதை பதைப்பு, மூட்டு வலி போன்ற சிறு சிறு வேதனைகள் விளைவிக்கும் வலிகள் எல்லாம் விலாசம் தெரியாமல் ஒடி மறைகின்றன.