பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 புறத்திணையைக் கூறத் தொடங்கிய தொல்காப்பியர் அகத்திணையியலில் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று கூறிய முறைக்கேற்பக் கைக்கிளையின் புறப் பாடாண் என்று, பாடாண் திணையை முதலாக வைத்துப் புறத்திணைகளைக் கூறியிருக்கலாம். அவர் அவ்வாறு கூறாமல் ஏழுதிணையிற் சிறந்தவை ஐந்தினை, ஐந்திணையிற் சிறந்தது புணர்ச்சிப் பொருளாகிய குறிஞ்சியாதலின், அக்குறிஞ்சியை முன்னர் எடுத்துக் கொண்டு குறிஞ்சியது புறம் வெட்சி என்று கூறி அதன்பின் முல்லையது புறன் வஞ்சி மருதத்துப் புறன் உழிஞை நெய்தலது புறன் தும்பை பாலையது புறன் வாகை பெருந்தினைப் புறன் காஞ்சி கைக்கிளைப் புறன் பாடாண் என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் ஐந்தினையைக் கூறும் முறை தொல்காப்பியர் முதல் கரு உரி என்ற மூன்றில் முதற் பொருளாகிய நிலத்தையும் காலத்தையும் கூறும்பொழுது முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற முறையிலும், உரிப்பொருள்களைக் கூறும்பொழுது குறிஞ்சி (புணர்தல்), பாலை (பிரிதல்), முல்லை (இருத்தல்), நெய்தல் (இரங்கல்), ஊடல் (மருதல்) என்ற முறையிலும் புறத்திணை களைக் கூறும்பொழுது குறிஞ்சி (வெட்சி) முல்லை (வஞ்சி) மருதம் (உழிஞை) நெய்தல் (தும்பை) பாலை (வாகை) என்ற முறையிலும் கூறுகின்றனர். இங்ங்னம் அவர் கூறும் மூன்று முறைக்கும் நல்ல காரணம் உண்டு. தமிழ்நாட்டிலே வேனிற்காலத்தின் பின்வரும் கார்காலம் உணவிற்கு அடிப்படையான உழவு முதலாகிய தொழில் நிகழ்வதற்குரிய காலமாதலின், அக்காலத்தின் முதலாகிய ஆவணித்திங்கள் தமிழர்தம் யாண்டில் தொடக்க மாதலின் அக்காலத்திற்குரிய முல்லைத் திணையை முதற் கூறி, அதன்பின் கூதிர் முன்பனிக்குரிய குறிஞ்சித்திணையைக் கூறி, பெரும்பொழுது வரையறையில்லாத மருத நெய்தல்களை அதன்பின் கூறி, பிரிந்து வெளியுலகத்தில் தொழில் செய்வதற்குரிய பாலையை ஈற்றிலே கூறினார். இவ்வாறு முல்லையை முதலாகக் கூறியது தமிழ்நாட்டு மக்கள்தம் தொழிலியற்று முறையை அடியாகக் கொண்டதாகும்.