பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இவ்விலக்கண விதியைப் பின்பற்றி எழுதத் தொடங்கிய இலக்கியங்களையெல்லாம் செயற்கை இலக்கியம் என்று கூறலாம். சொல் ஒசையை நுட்பமாக ஆராய்ந்து பிரித்து, இது சொல் தோன்றுதற்குக் காரணமான எழுத்தோசையாகும் என்று அறுதியிட்டு, அதற்கு வரிவடிவந் தோற்றுவித்துப் பல இலக்கணங்களை எல்லாம் ஆராய்ந்து எழுதிய காலம் கல்வி வளர்ச்சிக்குக் கால்கோள் செய்த காலமாயிற்று. ஒருவன் முதன்முதல் பொருளை உணர்ந்தான். பின்னர் அப்பொருளுணர்ச்சிக்குச் சொல்லைப் படைத்தான். பின்னர் அச்சொல்லை எழுதுவதற்கு எழுத்தினைப் படைத்தான். இந்த முறை கருதினால் முன்னே பொருள், இரண்டாவது சொல், மூன்றாவது எழுத்து என்றே இலக்கணமுறை வகுக்க வேண்டும். தொல்காப்பியரும் "பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும்" என்று பொரு ளுணர்ச்சியை முதன்மையாக ஒதியுள்ளமையைக் காண்க. தமிழண்ணல் என்பார் எழுதிய ஒப்பிலக்கிய அறிமுகம் என்ற நூலில், "திருக்குறள் மொழி அடிப்படையில் தமிழ் நூல் என்றாலும் பொருள் அடிப்படையில் அற நூலாகும். அது தானும் உலக அறநூல் இலக்கியம் பெரு வட்டத்துள் அடங்கும். சங்க இலக்கியத்தை வீரநிலைக் காலத்தினைச் (HeroicAge) சார்ந்தது எனக் காலப் பகுதி கருதி நோக்கும்பொழுது அவ்விலக்கியம் வீரநிலைக் கால இலக்கியங்களுடன் ஒன்றுபடும்" (பக்கம் 14) என்பர். ஆனால் தமிழ் நாட்டுப் பழைய இலக்கியங்களை ஆராய்ந்தால் வீரநிலைக் கால இலக்கியம் என்று கூறுவதா? வீரத்திற்கு முதலான காதல் நிலைக் கால இலக்கியம் என்று கூறுவதா? என்ற ஐயம் தோன்றுகின்றது.