பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 என்று கூறுகின்றார். வடக்கின்கண் வேங்கடமும், தெற்கின் கண் குமரியுமாகிய அவ்விரண்டெல்லைக் குள்ளிருந்து தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்கும் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் பொருளிலக்கணங்களை ஆராய்ந்து தொல்காப்பியம் என்னும் நூலினைத் தொல்காப்பியர் தொகுத்தார் என்பது மேற்காட்டிய பாயிரப் பொருளாகும். இதனால் தொல்காப்பியர் தமிழ்நாட்டு உலக வழக்குச் செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கினையும் நன்கு ஆராய்ந்து தம் இலக்கண நூலினை இயற்றியுள்ளார் என்னும் செய்தி புலனாகின்றது. உலகவழக்கு இவற்றுள், உலக வழக்கென்பது, குழந்தைகள், முதல் பெரியவர் வரையிலுள்ள கற்றோர், கல்லாதோர் என்னும் எல்லாமக்களும் தம் அன்றாட வாழ்வில், சொற்களைத் தேடி அமைக்காமல், தமக்குள் தாம் எளிமையாகப் பேசிக் கொள்வதாகும். இவற்றின் பொருள் உணர்வதற்கு நிகண்டோ, அகராதியோ வேண்டுவதில்லை. இலக்கண நூற்பயிற்சியும் வேண்டுவதில்லை. செய்யுள் வழக்கு செய்யுள் வழக்கென்பது உலக வழக்கைப் போன்ற தன்று. நன்கு வயது வந்த கற்றவர்க்கு மட்டும் அது புலனாகும். இதனைப் புரிந்து கொள்வதற்கு நிகண்டு, அகராதி, இலக்கணநூல் என்னும் இவையெல்லாம் வேண்டும். உலக வழக்கில் மிக எளிமையாகச் சொற்கோர்வைகளை அமைப்பது போலச் செய்யுள் வழக்கில் எளிமையாகச் சொற்கோவைகளை அமைத்துவிட முடியாது. செய்யுள் இயற்றப்பெறும் பொருளை இன்னதென்று தெரிந்து கொண்டு, அப்பொருளை உணர்த்தும் சொற்களையும் தெரிந்து கொண்டு, அதற்குரிய யாப்பியல்பு, அணியியல்பு வகையினையும் தெரிந்துகொண்டு செய்யுளைச் செய்ய வேண்டியிருத்தலினால் தொல்காப்பியர் செய்யுளைத் "தெரிந்துமொழிச் செய்தி" (தொல், சொல் - 76) என்று கூறியுள்ளார்.