பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 "பாட்டு என்பது இயற்கைப் பொருள்களின்படியாக இருக்க வேண்டும்" என்பர் பிளாட்டோ. "பாட்டு என்பது இயற்கையின் படி அன்று; இயற்கைப் பொருளை ஊடுருவி உணர்ந்து கொடுப்பதேயாம்" ான்பர் அரிஸ்டாடில். ஆனால் தமிழ்ப்புலவர் பழங்காலத்தில் இயற்கைப் பொருளை நேராகப் பாடுவதில்லை. அவர்கட்கு உலக மக்கட்குழுவில் வாழ்வியற் கூறுகள்தாம் பாடுதற்கேற்ற _ரிப்பொருளாகும். இயற்கைப் பொருள்களை அவ்வுரிப் பொருட்குத் துணையாக வைத்துக் கொண்டு பாடுவர். இவ்வுண்மையை ஆராய்ந்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தொல்காப்பியம் பொருளதிகாரத் தொடக்கத்தே, பொருளாவன: "அறம் பொருள் இன்பமும், அவற்றது நிலையின்மையும், அவற்றினிங்கிய வீடுபேறாம் பொரு ளெனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரியும், காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் அவற்றின் பகுதியாகிய இயங்கு திணையும் நிலைத்தினையும் பொருளாம்" என்பர் நச்சினார்க்கினியர். ஆனால் இளம்பூரணர் பொருளதிகாரத் தொடக்கத்தே "பொருள் என்பது யாதோவெனின்? மேற்சொல்லப்பட்ட சொல்லில் உணரப்படுவது. அது முதல் கரு உரிப்பொருள் _ன மூவகைப்படும். - . அஃதற்றாக அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள்யாதனுள் அடங்கும் எனின், அவையும் _ரிப்பொருளில் அடங்கும்" என்பர். மேற்கண்ட உரையாசிரியர் இருவருள் நச்சினார்க் கினியருக்குப் பொருள் என்ற உடனே அறம், பொருள், இன்பம் வீடுபேறு என்னும் இவையே முதலில் நினைவிற்கு வருகிறது. இளம்பூரணர்க்குப் பொருள் என்றவுடனே, முதல் கரு உரி என்பனதாம் நினைவில் வருகின்றன. உளவியல் முறைப்படி இருவர்தம் உள்ளப்பாங்கை நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவராக இருக்கின்றோம்.