பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 என்ற நூற்பாவிலும், மக்களைத் தொடர்ந்து வரும் ஐந்து நூற்பாக்களிலும் சுட்டுகின்றார். இவர் அகத்திணையியலில் மக்களைச் சுட்டும்போது ஆயர் வேட்டுவர் என்று முல்லைத்திணை மக்களையும், குறிஞ்சித்திணை மக்களையும் முதற்கண் குறிப்பிட்டுவிட்டு அவர்களுள் தலைமக்களைக் 'கிழவர்' என்ற சொல்லால் கூறிவிட்டு, மருதத்திணை மக்களையும், நெய்தல் திணை மக்களையும் இன்ன பெயரினர் என்ற விதந்து கூறாமல் 'ஏனோர் என்ற சொல்லாலேயே குறிக்கின்றார். எனவே தமிழ்நாட்டு மக்களுள் ஆயர் வேட்டுவர் முதலான திணைமக்களும் அவர் தம்முள் தலைமக்களும் அகவொழுக்கத்திற்குச் சிறந்தவராகக் கருதப்படுகின்றனர். தொல்காப்பியனார் ஆயர், வேட்டுவர், ஏனோர் என்ற திணை மக்களுக்கும், அவர் தம்முட் சிறந்த கிழவர் என்னும் தலைமைக்கட்கும் வேறாக அடியோர், வினைவலர் என்ற இரு பகுதியினரைக் குறிப்பிட்டு, அவர்களை அகத்திணை ஒழுக்கத்திற்கு உரியரல்லர் கைக்கிளை பெருந்திணைக்கே அவர் உரியர் என்று கூறுகின்றார். மேற்குறிப்பிட்ட இரு பகுதியினர்க்கு மேல் ஏவல் மரபின் ஏனோர் என்றவர்களைக் குறிப்பிட்டு இவரும் அகனைந்தினை முதலான அகவொழுக்கத்திற்குரியர் என்று கூறுகின்றார். ஏவல் மரபின் ஏனோர் என்ற சொற்றொடர்க்கு ஏவிக்கொள்ளும் மரபினை உடைய. ஏனோர் என்ற உரை கூறப்பட்டு அவர் பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர் என்பவர் ஆவர் என்பது குறிப்பால் உணரப்படுகிறது. எனவே அகத்திணையியலில் கூறப்படும் மக்கட் சமுதாயத்தை ஆயர், வேட்டுவர் முதலான திணைமக்க ளென்றும், அவர் தம்முட் கிழவர் என்றும் மேற்கூறிய திணைமக்களுக்கு அடியவராயும், வினைவலராயும் இருக்கும் பணிமக்கள் என்றும், ஏவல் மரபின் ஏனோராகிய பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளரென்று நான்கு பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம்.