பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 245

   (உ-ம் நூற்றொன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது எனவரும்.
       அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும்.       (தொல்.473) (
   (இ-ள்) நூறென்பது நின்று முற் கூறிய ஒன்று முதலொன்பான்களை யூர்ந்து வந்த பத்தென்பதனோடு புணருமிடத்தும் முற் கூறியவாறு ஈறுசினை யொழிய இனவொற்று மிக்கு முடியும் எ-று.
  (உ-ம் நூற்றொருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எனவரும்.
   ‘ஆகும்’ என்றதனால் ஒரு நூற்றொருபஃது, இருநூற்றொருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்ளப்படும்.
       அளவும் நிறையும் ஆயியல் திரியா 
       குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும் 
       முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.                (தொல்,474)
   (இ-ள்) நூறென்பதனோடு அளவுப் பெயரும் நிறைப் பெயரும் புணருமிடத்து முற்கூறிய இயல்யிற்றிரியாவாய் இனவொற்று மிக்கு முடியும். அவ்விடத்துக் குற்றியலுகரம் கெடாமையும் இனவொற்று மிக்கு வன்றொடர் மொழியாய் நிற்றலின் வல்லெழுத்து மிகும் இயல்பும், “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே” (226) என வன்றொடர் மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர்

எ-று.

   (உ-ம் நூற்றுக்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும.
   ‘திரியா என்றதனால் ஒரு நூற்றுக்கலம், இரு நூற்றுக் கலம் என நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்ளப்படும்.
       ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி 
       ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே 
       நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்.           (தொல்.475)
   இஃது ஒன்றுமுதல் எட்டுசறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடும் ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.