பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் வெள்ளைவாரணனாரின் வாழ்வியல் - காலநிரல்

தி. தெல்லையப்பன், எம்.ஏ., எல்.பில்.

    1917ஆம் ஆண்டு சனவரி 14ஆம் நாள் தஞ்சை மாவட்டம் திருநாககேச்சரத்தில் வெள்ளைவாரணனார் பிறந்தார். தந்தை கந்தசாமி முதலியார், தாய் அமிர்தம் அம்மையார், செங்குந்தர் மரபு. சொர்ணம் என்னும் பெயருடைய தமக்கையார் ஒருவர். பொன்னம்பலம், நடேசன் ஆகியோர் இவருடன் பிறந்த மூத்தவர்கள். வெள்ளைவாரணனாரின் பெரிய தந்தையார் பிறந்தநாளில் பிறந்ததால் அவரின் பெயரையே வெள்ளை வாரணனார் என இவருடைய தந்தையார் இவருக்குச் சூட்டினார்.
     தந்தையார் கந்தசாமியாரும் பாட்டனார் மெய்கண்டாரும் தமிழிலக்கியப் புலமை உடையவர்கள். குறிப்பாக, சைவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர். வெள்ளை வாரணனாரின் இளமைக்காலம் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற காலம். ஆங்கில மொழியின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. வித்து வான் தேர்வில் கூட வடமொழித் தாள்களை எழுதி வெற்றிபெற வேண்டிய நிலை இருந்தது. அத்தகைய சூழ்நிலையிலும் வெள்ளைவாரணனார் தமிழையும் தமிழிசையையும் கற்க விரும்பித் தம்மைத் தமிழில் ஆட்படுத்திக்கொண்டார்.
     வெள்ளைவாரணனார் தொடக்கக் கல்வியைத் திருநாகேச் சரத்தில் பயின்றார். அப்பள்ளியில் மூன்றாம் வகுப்புவரை கல்வி பயின்றார்.
     1928ஆம் ஆண்டு திருநாகேச்சரத்தில் அருள்மிகு நாகநாதசுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தவர், அரிமழம் அ.அரு. அண்ணாமலைச் செட்டியார். ஆலயத்திற்கு வந்தவர் வெள்ளைவாரணனாரின் இல்லத்தில் தங்கினார். இவரின் வருகை வெள்ளைவாரணனாரின் வாழ்க்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. இறைஈடுபாடு, ஒழுக்கம் இவற்றால்