பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தொல்காப்பிய ஆராய்ச்சி வல்லோசை தாராது, குறளடி முதலாக கழிநெடி லடி ஈறாக ஐந்து அடிகளிலும் ஒலி உயர்ந்த சொற் களால், 'புலன்' என்னும் வகைபோல் பொருள் விளங்க எளிமையாக இன்னோசைபட இயற்றப்படின் இழைபு ஆகும். இசைப் பாடல்களாக வருவன இவை. இவைகளில்தான் சொற்களை நீட்டி ஒலிக்க வேண்டும். கலியும், பரிபாடலும் எடுத்துக் காட்டுகளாகக் கூறப்பட்டுள்ளன. இயற்றமிழ்க்குரியன வெல்லாம் கூறி இறுதியில் இசைத் தமிழுக்குரியதைக் கூறியுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது. அன்றியும் இசைத் தமிழுக் குரிய பாடல்கள் இலக்கியமாம் தன்மைக்கு உரியன வாகவும் இருத்தல் வேண்டும் என்று உணர்த்தியமை போற்றத்தக்கது. இன்றைய திரைப் படப் பாடல் களில் பலவும், இசையரங்கில் பாடப்படுவன பலவும், இலக்கியமாம் சிறப்புடையனவாக இருப்பதைக் காணலாம். இசைப் பாடல்கள் இனிய தமிழாகவே இருத்தல் வேண்டும்; வேற்றுமொழிப் பாடல்களாக இருத்தல் பொருந்தாது என்பதையும் இந்நூற்பா உணர்த்துகின்றது. ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் தமிழிலக்கியம் செழித்து வளர்ந்துவந்த நெறிகளையும், இயல்பினையும் தொல்காப்பியம் சுட்டி அறிவிக்கின்றது. தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும் (science of Literature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோ மாக. இலக்கியச் செழிப்பு இனிதே மலர்தல் வேண் டும். மலர்க இலக்கியம்; வாழ்க தமிழ் மொழி