பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ix

குறிப்பும் தரப்பட்டுள்ளது. ஆங்காங்கு இன்றியமையாத இடங்களில் தக்க அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன.

அண்மையில் தோன்றியுள்ள புதிய உரைகள், உரைவளப் பதிப்புகள் ஆகியவற்றில் காணப்படும் பாடபேதங்களும், அவை பற்றிய ஆய்வுரைகளும் உரிய இடங்களில் சேர்க்கப் பெற்றுள்ளன. பயன்மிக்க பிற்சேர்க்கைகள் பலவும் இணைக்கப்பட்டுள்ளன.

இலக்கணச் சிந்தனைகள்

1. சின் - இசின்

759, 760 ஆகிய நூற்பாக்களால் இகும், சின் என்பன முன்னிலையசையாக வருவதோடு தன்மை, படர்க்கை ஆகியவற்றுள்ளும் வரும் என்று அறியப்பெறும்.

இளம். சேனா. நச்சர். மூவரும், காப்பும் பூண்டிசின் (அகம் 7) கண்ணும் படுமோ வென்றிசின் யானே (நற். 61) யாரஃ தறிந்திசினோரே (குறுந். 18) என முன்னிலை, தன்மை, படர்க்கைக்கு முறையே எடுத்துக்காட்டுக்கள் தந்தனர். தெய்வச் சிலையார் தன்மைக்கு மட்டும், வெற்புடைய அரண்கடந்து துப்புறுவர் புறம் பெற்றிசினே என வேறு காட்டியுள்ளார்.

கிளந்தவல்ல வேறுபிற தோன்றினும் என்னும் இடையியல் இறுதி நூற்பா உரையில் நச்சர். மான, தெய்ய, என, ஒரும், அத்தை , ஈ, இசின், ஆம், ஆல், என்ப. அன்று என்பன அசைநிலையாய் வருவதற்கு எடுத்துக்காட்டுத் தந்தார். இங்கு இசின் என்பதோர் இடைச்சொல் இடம் பெற்றுள்ளது. காதல் நன்மா மாற்றிசின் என்பது எடுத்துக்காட்டு.

மன்னுஞ் சின்னும் என்னும் நூற்பா (333) உரையில் பால. இசின் என்பது சின் என நின்றது என்பார். Tamil Culture என்னும் ஆங்கில இதழில் (Vol VII. No.2 April 1958) பேரா. சதாசிவம் The Suffix Cin (சின்) in Sankam Tamil என ஒர் கட்டுரை எழுதியுள்ளார். இதில் சங்க நூல்களில் சின் 130 இடங்களில் வந்துள்ளது என்றும், தன்மையில் இறந்த காலம் பற்றி 46 இடங்களிலும், முன்னிலையில் 9 இடங்களிலும், வினை வடிவங்களில் 63 இடங்களிலும் வந்துள்ளது என்றும் குறித்துள்ளார். மேலும் படர்க்கையில் புகழ்ந்திசினோர், பிரிந்திசினோர். பயந்திசினோரே என்று வருவதையும் குறித்துள்ளார்.

முன்னிலையில் காண்டி, உண்டி, கேட்டி என்பவற்றுடன் சின் நிற்கும்.

தன்மையில் வந்திசின் என்றிருக்கும். இங்கு வந்து என்பதுடன் சின் இணைந்து வந்துசின் என்றாதல் எதிர்பார்க்கலாம். ஆனால் வந்திசின் என்றாதலைக்