பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xiii

ஆ. அர் ஆர் இர் ஈர்

சிவலிங்கனார் தம் உரை வளத்தில் சொற்கட்டு நீங்காத வண்ணம் இருக்க வேண்டும் என்று கருதி 893, 709 ஆம் நூற்பாக்களில் அர் ஆர் என்றும் இர் ஈர் என்றும் பிரித்தே எழுதப்பட வேண்டியவற்றை அர்ரார் எனவும், இர்ரீர் எனவும் புணர்த்தமை தொல்காப்பியரின் இலக்கண மரபிற்குப் பொருந்தாது. *

3. ஒடு - ஒடு

ஐஒடு குஇன் (114), பெயர் ஐ ஒடுகு (549), ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி (558) என்பனவற்றால் ஒடு என்பது மூன்றன் உருபு என்பது சற்றும் ஐயத்திற்கு இடமின்றிப் புலனாகிறது. எனினும் பல இடங்களில் ஒடு என்பதற்குப் பதிலாக ஓடு என்பதுவும் மூன்றன் உருபாகப் பயிலப்பட்டுள்ளதைக் காணலாம்.

பெரும்பாலும் வரும்மொழி முதல் எழுத்து உயிர்மெய்யாக இருந்தால் ஒடுவும் (அதனொடு மயங்கல்), உயிராக இருந்தால் ஓடுவும் (ஆவோ டல்லது) பயிலும் எனலாம்; இது விதி அன்று பெரும்பான்மை மரபு; அவ்வளவு தான். தொல்காப்பியப் பதிப்புக்கள் பலவற்றில் இம்மரபு ஒரோ வழி மாறியுள்ளமையும் காணலாம்.

    • நூ. 659, 4 வினையோ டல்லது; வினையொ டல்லது
    • நூ. 1185: 2, 3 மிகுதியோடவை; மிகுதியொடவை
    • நூ. 1412: 2 வாரமோடந்நிலை; வாரமொடந்நிலை
    • நூ. 1448, 2, 3 கிழத்தியோ டளவியன்; கிழத்தியொடளவியன்
    • நூ. 1503: 4 குழவியோ டிளமை; குழவியொடிளமை
    • நூ. 1508: 1, 2 அணிலோ டாங்கவை; அணிலொடாங்கவை

மேற்கண்ட இடங்களிலெல்லாம் தொல்காப்பியப் பதிப்புக்களில் ஒடு, ஓடு ஆகிய இரண்டும் பயின்று வரக்காண்கிறோம்.

நூல் முழுவதிலும் ஒடு என்பதனையே மூன்றன் உருபாகக் கொண்டுள்ள பால. கூட நான்கு இடங்களில் ஓடு என்னும் வடிவத்தை ஏற்றுள்ளார். கவவோடியையின் (70), மகடூஉ வோடில்லை (984), தரவோடொக்கும் (1404) அவற்றோடொக்கும் (1418) என்னுமிடங்களே இவை. இவற்றுள் மூன்று நான்காம் இடங்களில், "ஒடு என்பது ஓசை கருதி நீண்டது" எனக்கூறியுள்ளார். இத்தகைய


*   இது பிற்கால வழக்கின் தாக்கம் என்பது உரிய இடங்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ப.வெ.நா.