பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JB3 பிற்சேர்க்கை 5 இப்பதிப்பிற்காகப் பார்க்கப்பெற்ற சென்னை டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் நூலகத்தின் தொல்காப்பியச் சுவடிகள். தொல்காப்பிய மூலத்தைத் தெளிவான பாடவேறுபாடுகளுடன் வெளியிடுவதற்காகச் சென்னை டாக்டர் உ.வே.சா. நூலகத்தில் உள்ள தொல்காப்பியச் சுவடிகள் அனைத்தும் பார்க்கப் பெற்றன. எல்லாச் சுவடிகளிலும் மூலம் மட்டுமே தெளிவாகப் படிக்கப் பெற்றுள்ளது. இச்சுவடிகள் அனைத்தையும் பார்ப்பதற்குத் துணைபுரிந்தவர் டாக்டர் உ.வே.சா. அவர்களுடைய பெயரர் திரு. க.சுப்பிரமணியம் அவர்கள். உடனிருந்து முழுவதையும் படித்து உதவியவர் மயிலம் பேரா. வே. சிவசுப்பிரமணியன் ஆவார். நூலகத்தின் காப்பாளர் வித்துவான் திரு. பாலசாரநாதன் அவர்களையுள்ளிட்ட அலுவலர்கள் அனைவரும் பல நிலைகளில் துணைபுரிந்தனர். இங்குள்ள சுவடிகளுள் தொல்காப்பிய மூலம் மட்டும் உள்ள சுவடிகள் 3. (7.3, 115, 1053) ஏனையவை அனைத்தும் ஒலையில் எழுதப்பெற்ற உரைச்சுவடிகள். இவ் வுரைச்சுவடிகளுள் சிலவற்றில் ஒர் இயலுக்கு மட்டும் உரையிருக்கும்; அதில் சிலவற்றில் ஒர் இயலுக்குக்கூட முழுவதுமான உரை இருக்காது. சில சுவடிகளில் ஒர் அதிகாரம் முழுவதற்கும் உரை இருக்கும். சிலவற்றில் இரண்டு அதிகாரங்களுக்கு உரை இருக்கும். சில சுவடிகளில் மூன்று அதிகாரங்களிலும் சில பகுதிகளுக்கு உரை இருக்கும். மூன்று அதிகாரங்களுக்கும் சேர்த்து உரையுடன் கூடிய முழுச்சுவடியாக ஒன்றுகூட இல்லை. இனி இச்சுவடிகளைப் பற்றிய விவரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பெறுகின்றன.