பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

121



ஜி.டி. நாயுடு கல்விக் கோட்டத்தில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை உண்டு. அந்த நாளிலும் கூட மாணவர்கள் கல்விச் சிந்தனையோடுதான் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆட்டம் பாட்டமோ, ஆடம்பர கேளிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது.

வாரம் ஒரு நாள் விடுமுறையைத் தவிர, மற்ற நாட்களில் மாணவர்கள் கல்விக் கோட்டத்திற்கு வந்தாக வேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் விடுமுறை வேண்டக் கூடாது.

மாணவர்கள் படிக்கக் கூடாத ஆபாசமான புத்தகங் களையோ, கதை, நாவல்களையோ, பத்திரிக்கைகளையோ படிக்கக் கூடாது. மீறிப் படித்தால் அவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்படும்.

உணவு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், தங்கள் அறையையும், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தவறினால், அன்று முழுவதும் உணவு விடுதியை அந்த மாணவர்கள் சுத்தம் செய்து கொண்டே இருக்கும் தண்டனையைப் பெறுவார்கள்.

உணவு உண்ணும் மாணவர்கள் இலையில் சோத்துப் பருக்கை ஒன்று கூட இருக்கக் கூடாது. மீதம் ஏதாவது இலையில் இருந்தால், அவர்கள் ஒரு நாள் முழுவதும் சமையல் வேலையைச் செய்தாக வேண்டும்.

கொடுத்த தண்டனையை நிறைவேற்றாத மாணவர்களுக்கு, மறுநாள் அந்தத் தண்டனை இரு மடங்கு தண்டனையாக்கப்படும். அதற்கும் அந்த மாணவர்கள் கட்டுப்படவில்லை என்றால், அவர்கள் அந்தப் பள்ளியை விட்டே நீக்கப்படுவார்கள் என்பது உறுதி.

மாணவர், சமையலர் எடை
குறைந்தால், அதிகமானால்....!

உணவு விடுதியில் உள்ள மாணவர்களது உடல் எடையும், விடுதியில் வேலை செய்பவர்களின் எடையும் வாரம் ஒரு முறை சோதித்துப் பார்க்கப்படும்.