பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

125



இவை மட்டுமே போதா. ஆண்டாண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் அதனதன் திறமை, நன் நடத்தை, மாணவர்களது முற்போக்குச் சிந்தனைகளை நாட்டும் பொருட்காட்சிச் சாலைகளை நடத்துவது நல்லது.

அவற்றை நடத்துவதற்கு மாணவர்களுக்குப் போதிய அக்கறையையும், பொறுப்புணர்ச்சியையும் அந்த பள்ளிக் கல்வி உருவாக்க வேண்டும்.

கல்விக் கோட்டங்களில் ஆசிரியர்களை குறைவாகவே நியமிக்கப் படல் வேண்டும். அவர்கள் எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளாக இருத்தல் வேண்டும். அவர்களுடைய பணி, மாணவர்கள் முன்னேற வழிகாட்டுவதே ஒழிய, பள்ளிகளுக்கு வந்து தமிழ்ப் பாடத்தை ஏற்றுப் பாட்டுகளைப் போல ஏற இறங்கப் பாடுவதும், மற்ற பாடங்களை மாணாக்கர், மாணாக்கியர்போல மனனம் செய்ததை சொற்பொழிவாற்றுவதுமே ஆசிரியர்கள் பணிகளல்ல!

கலைக் கல்லூரிகள் துவக்கப்படுவதை ஓரளவோடு நிறுத்திக் கொண்டு, தொழிற் கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அரசாங்கமே அமைத்து நடத்தப் படல் வேண்டும்.

அவைதான் மாணவர்களுக்குரிய வாழ்க்கைப் பயிற்சியை அளிக்கும். மடி தவழ்ந்த மாணவர்களாக மாறார்!

ஏட்டுக் கல்விக்கு அங்கே முக்கியத்துவம் இல்லாமையால், மாணவர்களின் உடலும்-உள்ளமும் உருக்குலையா.

கண்விழித்து அவர்கள் நீண்ட நேரம் மனப் பாடம் செய்யவோ, படிக்கவோ ஒன்றுமில்லை.

வாழ்க்கையும்-கல்வியும் ஒன்றாக இணையும் இடம் பல்கலைக் கழகமாதலால், அங்கே கடமையும், பொறுப்பு உணர்ச்சியும் வளரும். என்பதே உண்மை.

தொழிலியல் துறை விஞ்ஞானியாக மட்டுமே விளங்கி வந்த ஜி. டி. நாயுடு அவர்கள், தோன்றிய துறையான கல்வித் துறையிலும் புகழ்மிக்க சிந்தனையாளராக அறிமுகமாகி, தனது புகழ்க் கொடியை கல்வித் துறையிலும் நாடளாவ, அறிவளாவ பறக்க விட்டுக் கொண்டிருந்தார்.