பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. சித்த வைத்தியர் ஜி.டி. நாயுடு;
ஜெர்மன் பேச்சு ஆய்வுக்கு அழைப்பு

“வசையிலா வண்பயன் குன்றும்; இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்”

“புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த மண், தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவுபடும்” என்கிறது தமிழர் தம் மறையான திருக்குறள் வேதம்.

திருவள்ளுவர் பெருமானுடைய திருவாக்குக்கு ஏற்ப, தான் பிறந்த மண்ணில் விந்தையான மனிதராக திரு.ஜி.டி. நாயுடு விளங்கினார். அவருக்குத் தெரியாத தொழில் கிடையாது.

பருத்தி வணிகத்திலே ஆழம் பார்த்து தோல்வி கண்ட ஜி.டி. நாயுடு, பஸ் தொழில்களிலே பறக்கவிட்டார் தனது புகழ்க் கொடியை - உலகளாவ! அந்த அளவுக்கு அவர் இரும்போடு பழகி, இயந்திர மனிதனாக வெற்றி பெற்றார்!

விவசாயப் பண்ணையச் சொந்தமாக நிறுவி, அந்த இயற்கையான தாவரத்திலே தனது விஞ்ஞான அறிவைப் புகுத்தி ஒரு மாபெரும் புரட்சியையே பூக்க வைத்தார் ஜி.டி. நாயுடு அதன் மனம் உலகெங்கும் கமழ்ந்தது.

சாதாரண ஒரு ரேசண்ட் பிளேடைச் செய்து, அதன் ஆற்றலை அமெரிக்காவும், இங்கிலாந்தும் போட்டா போட்டி வணிகம் நடத்தித் தோல்வி கண்டு, பிறகு அவரையே விலைக்கு வாங்க சகலகலா வித்தைகளையும் யூகமாகக் கூறி, தோல்வி கண்டன அந்த நாடுகள் திரு. ஜி.டி. நாயுடு விஞ்ஞானத்தின் முன்பு!