பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

151



அன்புள்ள மாணவ நண்பர்களே! இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறுவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் முன்பு நான் உரையாற்றுகிறேன்.

கல்லூரியை விட்டு நீங்கள் வெளியேறிய பிறகு, எதை நீங்கள் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைப் பற்றிச் சில அறிவுரைக் குறிப்புக்களை உங்கள் முன்பு சிந்தனைக் காக வைத்திட விரும்புகிறேன்.

அவை, உங்களுடைய பேராசிரியர்கள் வகுப்புக்களிலே அடிக்கடி கூறி அலுத்துப் போனவைகளே! என்றாலும், நான் கூறும் அறிவுரைகளில் மிக முக்கியமானது எது தெரியுமா? திரைப் படத்தைப் பார்க்கக் கூடாது என்பதே ஆகும்.

ஏன் பார்க்கக் கூடாது திரைப்படங்களை என்றால், அவைதான் மாணவர்களின் இளம் உள்ளங்களை கெடுக்கும் கருவிகளாகும் என்பது மட்டுமல்ல, கண்ணையும் - உடலையும் கெடுப்பதோடு, மனத்தையும் பாழாக்கி விடுகின்றன. பாக்டீரியா கிருமிகள் செய்ய முடியாத தீமைகளை எல்லாம் சினிமா படத்தில் வரும் காட்சிகள் செய்கின்றன. அவை உங்களுடைய சக்திகளை எல்லாம் சீரழித்து விடுகின்றன. மனோ சக்திகளைச் சிதறடித்துக் கோழைகளாக்கி விடுகின்றன.

புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விடுங்கள். மூன்றாவதாக, அரசியல் கட்சிகளின் கூட்டங்களிலே கலந்து கொள்ளாதீர்கள், அவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளைக் கேட்காதீர்கள். நான் கூறும் இவற்றை எல்லாம் நீங்கள் கேட்டவை தான். என்றாலும், மீண்டும் திரும்பத் திரும்பச் சொல்வது என்போன்றோர் கடமை ஆகும்.

தீமை தரும் எந்தப் பழக்கங்களுக்கும் மாணவர்கள் அடிமையாகி விடக்கூடாது. தவறி நீங்கள் அடிமையாவிர்களே யானால், அவை உங்கள் வாழ்நாட்களை வீணாக்கி விடுவதோடு, மனித சமுதாயமும் நஞ்சேறிய உடலாகி விடும்.

மாணவர்களைச் சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதிற்குள்தான் தீய பழக்கங்கள் பற்றும் பருவமாகும். அவற்றை இளம் வயதிலேயே மாற்றாவிட்டால், பிறகு எப்பொழுதுமே மாற்ற முடியாது.