பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


பல ஆண்டுகளாக பணிபுரிந்த டாக்டர் இலட்சமன சாமி முதலியார், இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர்.இ.பி.இராமசாமி ஐயர் போன்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்களது இடைவிடாத உழைப்பும், கடமை உணர்ச்சியும், தணியாத ஆர்வமுமே ஆகும். அவர்களைப் பின்பற்றி நீங்களும் முன்னேறி நமது தாயகத்தின் ஒளிபடைத்த தலைவர்களாகத் திகழவேண்டும் என்பதே எனது ஆவல்.

என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.

அவற்றை எல்லாம் இங்கே கூறிட நேரமில்லை இன்று வரை நான் படித்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கையைப் பற்றி மட்டும் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

விஞ்ஞானம்,பொறியியல் ஆகிய துறைகளைப் பற்றிய 18 ஆயிரம் புத்தகங்களும், உளநூல் தொடர்புடைய 3 ஆயிரம் நூல்களும் எனது நூலக அறையில் இருக்கின்றன. அவற்றை ஆழ்ந்து படித்ததின் மூலம்தான் ஓரளவுக்கு நான் அறிவு பெற்றேன். கோவைக்கு வருகின்ற மாணவர்கள் அவற்றை வந்து பார்க்கலாம். அதனால் நீங்கள் புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள்.

மதுரை அமெரிக்கன்
கல்லூரி பேச்சு!

(மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வாணிக மன்றத்தில், COMMERCE UNIONனில் 23.2.1953 - ஆம் ஆண்டில் திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் சொற்பொழிவு ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது)

"அன்பார்ந்த மாணவ மணிகளே!

கல்லூரியில் என்ன பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும், மாணவர்கள் எவ்வாறு கல்வி கற்கிறார்கள் என்பதைக் குறித்தும், எனக்குப் பல ஆண்டுகளாக ஒன்றுமே தெரியாமல் இருந்தது. இப்போது கூட இங்கே நீங்கள் என்னென்ன படிக்கிறீர்கள் என்று சரிவரத் தெரியாது.