பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



மாணவர்களே! நீங்கள் வேலைக்குச் சேரும் இடத்தில் உங்களது உழைப்பாலும், ஆர்வத்தாலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். உங்களை வேலைக்கு வைத்திருப்பவர் தானாக முன்வந்து, மனம் விரும்பி, உங்களையும் எனது வியாபாரத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும்.

உங்களுக்கு ஒர் உதாரணம் கூற விரும்புகிறேன். நான் பஸ் போக்குவரத்துத் தொழிலில் புகுந்த பொழுது, எனக்குக் கணக்கு வழக்கு முறைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் மிகக் குறுகிய கால அனுபவத்தின் வாயிலாக ஓர் அருமையான கணக்கு முறையைக் கண்டு பிடித்தேன். அதே முறையைத்தான் 1920 - ஆம் ஆண்டிலிருந்து இன்றும் பின்பற்றி வருகிறேன்.

அந்த கணக்கு முறையையும், அதற்காகப் பயன்படுத்தப் படும் புத்தகங்களையும், இரசீதுகளையும் நீங்கள் வேறு எங்குமே காணமுடியாது. பாடப் புத்தகங்களிலும் பார்க்க முடியாது.

அவை, வியாபாரத்தைத் திறமையாகவும், சிக்கனமாகவும் நடத்துவதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டவை. அதைப் போலவே நீங்களும் பிற்காலத் தேவைக்கேற்பப் புதியன கண்டு புகழடைய வேண்டுமென நான் உங்களை வாழ்த்துகின்றேன்.

திருச்சி சூசையப்பர் கல்லூரி
விஞ்ஞானக் கழக உரை!

(திருச்சி சூசையப்பர் கல்லூரி விஞ்ஞானக் கழகத்தில் 14.2.1953-ஆம் ஆண்டில், திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் முழக்கமிட்ட உரையின் ஒரு பகுதிச் சுருக்கம் இது.)

மாணவர்களே மாணவிகளே! அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களே!

கலை, வரலாறு முதலிய பாடங்களில் எனக்குச் சரியான பயிற்சி இல்லாததால் நீங்கள் விரும்பும் அளவுக்கு அழகாகச் சொற்பொழிவாற்ற என்னால் முடியாது.