பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



அதற்கு மாணவர்கள் தங்கள் சக்தியை வீணாக்காமல் திரட்டி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் பல செயற்கரும் செயல்களை மாணவர்களால் செய்ய முடியும். எனவே, மாணவ மணிகளே! உங்களுடைய சக்தியை வீணாக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை, கிண்டியின்
பொறியியல் கல்லூரியில்!

சென்னை நகரில், கிண்டி பகுதியிலே இருக்கும் பொறியியல் கல்லூரியின் இயந்திரப் பிரிவு மன்றம், 25.2.1953-ஆம் ஆண்டில் நடைபெற்ற விழாவில் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுச் சுருக்கம் இது :

"பொறியியல் மாணவ மணிகளே!

உங்களிடையே நான் பொறியியல் துறை பற்றி ஒரு சிறிதும் பேச மாட்டேன். அதற்குக் காரணம், நீங்கள் தினந்தோறும் அதைப் பற்றியே படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட உங்களிடம் நான் வேறு பொறியியல் துறை நுணுக்கங்களை எடுத்துரைப்பது, அவ்வளவு உணர்வு பூர்வமான மகிழ்ச்சியைக் கொடுக்காதில்லையா? அதனால் சில அவசியமான அறிவுரைகளை மட்டுமே உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.

முன் நாட்களில் பொறியியல் துறை பட்டதாரிகள் திறமையாளர்களாகவும், உறுதியான உள்ளமுடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் படிக்கும்போது மின்சார ரயிலோ, மோட்டார் சைக்கிளோ அல்லது கார்களோ கிடையாது.

அந்த நாளில் மாணவர்கள் உண்ணும்போதும், கல்வி பற்றிய சிந்தனையிலேயே இருந்தார்கள். அதனால், அறிவாற்றல் படைத்தவர்களாக அக்கால மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியே வந்தார்கள்.

ஆனால், தற்கால மாணவர்களாகிய உங்களுக்கோ கல்வியைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. உங்களுடைய எண்ணமெல்லாம் களியாட்டங்களையே சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றன. அதனால் சக்தி சிதறுகின்றது; உள்ளமும் உடலும் கெடுகின்றன.