பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


பரிசோதித்து நீரிழிவு நோயை குணமாக்கும் மருந்துகளையும், வெள்ளை - வெட்டை என்ற நோய்களுக்குத் தனது நண்பர்களுடன் இணைந்து, மேல் நாடுகள் போற்றுமளவுக்கு சிறப்பான மருந்துகளையும், ஜி.டி.நாயுடு கண்டுபிடித்தார். இதனால் சித்த வைத்தியப் பேராசிரியர் என்ற பட்டத்தையும் நாயுடு பெற்றார்.

ஆக்கம் அழிவுக்கே!
உடைத்து நொறுக்கினார்!

இவை மட்டுமா? அறிவியல், தொழிலியல் துறைகளில் மேலும் பலவிதமான அரிய கண்டுபிடிப்புகளை எல்லாம் ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த விவரங்களை, புத்தகத்தின் உள்ளே நீங்கள் படித்து மகிழலாம்.

இத்தகைய அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை அரும் பாடுபட்டுக் கண்டுபிடித்த ஜி.டி.நாயுடு, தனது விஞ்ஞான விந்தைக் கருவிகள் எல்லாவற்றையும் சென்னையில் ஒரு பொருட்காட்சியாகத் திறந்து வைத்து, மக்களைப் பார்க்குமாறு செய்தார்.

மக்கள் அந்தப் பொருட்காட்சியைப் பார்த்த பின்பு, மனம் நொந்து, விரக்தி உள்ளத்தோடு, வேதனைப்பட்டு, “ஆக்கம் அழிவுக்கே' Construction for Destruction என்ற அறிவிப்புப் பலகையிலே அதை எழுதி, அந்த காட்சியகத்தின் வாயிலிலே மாட்டித் தொங்க வைத்து, அதனையும் மக்கள் பார்க்குமாறு செய்தார் ஜி.டி. நாயுடு.

தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணா அவர்களையும் அந்த விஞ்ஞானப் பொருட் காட்சியகத்துக்கு வரவழைத்து, அவர்களையும் அவற்றைப் பார்க்கச் செய்த பின்பு, கூடியுள்ள மக்கள் கூட்டத்திற்கு முன்பாக, தனது அரிய கண்டுபிடிப்புக் கருவிகளை எல்லாம் மக்களை விட்டே அடித்து உடைத்து நொறுக்கினார்!

தொழிலியல் விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு மனம் உடைந்து ஏன் அவற்றை அடித்து உடைத்து நொறுக்கினார்? என்ற விவரத்தை நீங்கள் இந்த நூல் உள்ளே படிக்கலாம் வாருங்கள்!