பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

"நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை - என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு"

என்று, உலகியல் இயக்கத்திற்கு வாழ்வியல் சட்டத்தை வகுத்தளித்த தமிழ் மறை ஞானி திருவள்ளுவர் பெருமான், "நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இந்த உலகம்" என்று கூறியுள்ளார்.

அதற்கேற்ப, தனது வாழ்நாளெல்லாம் ஓடி, யாடி உழைத் துழைத்து; தமிழகத்தின் தொழில் அறிவுக்கு ஞானியாகத் திகழ்ந்த தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள், 04.01.1974-ஆம் ஆண்டு வரை நம்மோடு நடமாடி - காலத்தின் பசிக்கு நல்லமுதம் ஆனார்!

ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் ஆகின்றன - அவர் நம்மை விட்டு மறைந்து பிரிந்து, ஆனால், சுமார் எண்பது ஆண்டுகள் அந்த தொழிலியல் மேதை நம்மோடு வாழ்ந்து, நாடகம் பார்க்க வரும் கூட்டம் போல, சிறுகச் சிறுகச் செல்வத்தைச் சேர்த்து, அது நிலையில்லாத நீர்க்குமிழ் என்பதை உணர்ந்தும், நிலயைான - அறமான தொழிலியல், விவசாய இயல், கல்விப் புரட்சி இயல், சித்த வைத்திய இயல், விஞ்ஞானவியல் போன்ற பல்வியல்களில் நிலையான, வாழ்வியல் அறங்களைச் செய்து, நேற்று நான் இருந்தேன், இன்று மறைந்தேன் என்று கூறுமளவுக்குக் காலத்தின் புரட்சிக்கு விதையாக விளங்கியுள்ளார்.

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு, தான் ஈடுபட்ட ஒவ்வொரு செயலையும், How to Know என்ற அடிப்படையில், 'அறிவது எப்படி?' என்ற தத்துவ இயலுக்கு ஏற்றபடி ஆராய்ந்து உண்மைகளை உணர்ந்து - அவற்றிலே வாகை சூடி, வாழ்ந்து காட்டி, மற்றவர்களுக்கும், இன்றும் வழி காட்டியாகத் திகழ்கின்றார்!

தத்துவஞானி, தன்னை, தனது மனத்தை, மனம் எழுப்பும் கேள்விகளுக்கு - மனமே தரும் பதில்களை, விவகார அறிவை, காரணத்தை, விவாத முடிவைத் தான் நம்புவான்; ஏற்று நடப்பான்.