பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

149

காரியங்கள் நடைபெறவேண்டும். திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத்தான் முதலீட்டாளர்களும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் கூட முக்கியமல்ல. அவர்கள் கேட்காத சலுகைகளை அளிப்பதாகக் கூறி இடையிலே பேரம் பேசுவதைத்தான் அவர்கள் விரும்புவதில்லை. தொழிற்சாலைகள் அமைக்க 'Good atmo- sphere' பொருத்தமான ஒரு சூழ்நிலையைத்தான் தொழிலதிபர்கள். தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதனைத் தீர்த்துவைக்கும் அரசைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள். தொழில் முனைவோருக்கு முக்கியமான தேவைகளிலே ஒன்று மின்சாரம். மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் அதைக் குறிப்பிடத் தவறவில்லை. மின்சாரத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தப் புதிய முதலீடும் செய்யப்படவில்லை. 1989-லே நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்துவிட்ட அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் வடசென்னையிலே ஒரு மின் நிலையத்தை உருவாக்க மத்திய அரசோடு பேசி அதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த நிலையத்தை உருவாக்கமுடியாமல் அந்த இடத்திற்கு உரியவர்கள் உச்சநீதிமன்றத்திலே சென்று தடையாணை பெற்றுவிட்டார்கள். ரூ. 500 கோடியிலே உருவாக வேண்டிய அந்தத் திட்டம் தாமதப்பட்டது. 1989-லே நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டத்தைப் பற்றி ஆய்வு செய்து, இந்த ரூ.500 கோடியிலே உருவாகி இருக்கவேண்டிய திட்டம், இப்போது ரூ. 700 கோடி அளவிற்கு வளர்ந்து விட்டது. இருந்தாலும் அதை நிறைவேற்றவேண்டுமென்று நிலத்திற்கு உரியவர்கள் யார் என்று தேடிப் பார்த்து பன்னீர்தாஸ் குடும்பத்தினர் என்பதை அறிந்து பன்னீர்தாஸினுடைய இளவல் சந்தோஷம் அவர்களை அழைத்துப் பேசி, அவர் என்னிடத்திலே சொன்னார், பன்னீர்தாஸினுடைய பெயரிலே அங்கே ஒரு பொருட்காட்சியோ, கண்காட்சியோ அமைக்கப் போகிறோம். தங்கக் கடற்கரையைப் போல, அது எங்கள் அண்ணனின் ஆசை என்று சொன்னார். நான் அவரிடத்திலே சொன்னேன். உங்கள் அண்ணனின் ஆசை அந்த