பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

தொழில்துறை பற்றி

1969 முதல் 1975 வரையிலே உள்ள அந்த இடைக்காலத்திலே தான் தொடங்கப்பட்டது. அதிலே அந்த சிப்காட்டின்படி, தூத்துக் குடியிலே ஸ்பிக் தொழிற்சாலை, இராணிப்பேட்டையிலே தொழில் வளாகங்கள், ஓசூரிலே தொழில் வளாகங்கள் இவை எல்லாம் 1969-லிருந்து 1975 வரையிலே தொடங்கப்பட்டன. State Industries Promotion Corporation of Tamil Nadu என்பதுதான் சிப்காட். அந்தக் காலகட்டத்திலேதான் சேலம் இரும்பு ஆலை கிடைத்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

சேலம் இரும்பு ஆலை கிடைப்பதற்காக, அன்றைக்குப் பாராளுமன்றத்திலே இருந்த 24 கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாதிட்டோம், போரிட்டோம். அப்போது இந்திரா காந்தி அவர்கள் மைனாரிட்டி கவர்ன்மென்ட் என்ற நிலையிலே அந்த சர்க்கார் இருந்தபோது, 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம் இதுதான் நேரம் என்று பயன் படுத்திக்கொண்டு, இந்திரா காந்தியை நாங்கள் மிரட்டவில்லை; இந்திரா காந்தியிடத்திலே நாங்கள் மிரட்டியதெல்லாம் எங்களுக்குத் தொழிற்சாலை கொடுங்கள் என்பதற்காகத்தான்; இந்திரா காந்தியிடத்திலே நாங்கள் வாதாடினோம், போராடினோம், இன்னும் சொல்லப்போனால் அந்தத் திட்ட வரைவுக்காக முதலமைச்சர்களை எல்லாம் அழைத்து, இந்திரா காந்தி அவர்கள் பிரதமராகவும் மொரார்ஜி தேசாய் அவர்கள் துணைப் பிரதமராகவும் இருந்து நடத்திய அந்தக் கூட்டத்தில், அந்தத் திட்ட வரைவை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, “இதிலே சேலம் திட்டம் இல்லை. ஆகவே நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம்" என்று நானும் அன்றைய நிதிஅமைச்சராக இருந்த நண்பர் மதியழகனும் வெளிநடப்பே செய்தோம். அதற்கு அடுத்த ஒரு வாரத்திற்கெல்லாம் இந்திரா காந்தி அம்மையார் டில்லிக்கு என்னை வருமாறு தந்தி கொடுத்து அழைத்து, சேலம் தொழிற்சாலைக்கான அந்த ஆணையை வழங்கினார்கள் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படி நாட்டுக்காக, மாநிலத்திற்காகத்தான் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்றைக்குப் பயன்பட்டார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.