பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

261

தொழிற்சாலை அதனுடைய வேலை முக்கால் பகுதி முடிந்துவிட்டது. நேற்றுகூட நான் சமத்துவபுரம் திறப்பு விழாவிற்காக காஞ்சிபுரம் அருகே சென்றபோது அந்தத் தொழிற்சாலை வெகு வேகமாக தன்னுடைய பணிகளை நிறைவேற்றிக் கொண்டு இருப்பதைக் காண நேரிட்டது.

நீங்கள் யாராவது ஒரு முறை பெங்களூர் சாலையிலே காஞ்சிபுரம் வழியாகச் செல்லும்போது பார்த்தால், வழியின் இரண்டு புறமும் தொழிற்சாலை மயமாக இருப்பதைக் காண முடியும். அதுவும் ஹூண்டாய் தொழிற்சாலையைப் பார்த்தால் எவ்வளவு நீளத்திற்கு அது கட்டப்பட்டுள்ளது என்பதையும், அதைத் தொடர்ந்து அடுத்துள்ள இந்தக் கண்ணாடி தொழிற்சாலை எந்த அளவுக்கு, எவ்வளவு ரம்மியமாகக் காட்சியளிக்கிறது என்பதையும் காண முடியும். திரு. சொக்கர் போன்றவர்கள், தொழிலிலே அக்கறை உள்ளவர்கள் போய் இதைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சொக்கரை அழைப்பதால் எதிர்க்கட்சித் தலைவரை அழைக்க வில்லை என்று அர்த்தம் அல்ல. எல்லோரும் போய்ப் பார்த்து, நீங்கள் அந்த உண்மையை உணர வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.

50 கோடி ரூபாய் செலவிலே இருங்காட்டுக்கோட்டையில் மார்க்யூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேப்பர் போர்டு மிஷினரி தயாரிக்கும் தொழிற்சாலை.

44 கோடி ரூபாய் செலவிலே இருங்காட்டுக்கோட்டையில் கோவேமா உட்பிளாஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் ரிஜிட் பி.வி.சி பலகை தயாரிக்கும் தொழிற்சாலை.

5 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ஆட்டோலெக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நீர் மற்றும் எண்ணெய் பம்ப் தயாரிக்கும் தொழிற்சாலை.

30 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் ரெனால்ட்ஸ் பென் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பால்பாயின்ட் பேனாக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.