பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

தொழில்துறை பற்றி

இந்தத் தகவல் தொழில் நுட்ப மையத்தை இந்த அரசு தமிழகத்தில் விரிவாகச் செய்ய வேண்டும் என்பதற்காக எடுத்துள்ள முயற்சிகளைப் பற்றி எல்லாம் பலமுறை இந்த அவையிலே நான் குறிப்பிட்டிருக்கிறேன். எழுபதுகளிலே வெறும் கருத்துப் படிவமாக மாத்திரமே கருதப்பட்டிருந்த தகவல் தொழில் நுட்பம் இன்றைக்கு எங்கும் நிறைந்த பொருளாக ஆகிவிட்டது என்பதை அவை உறுப்பினர்கள் மிக நன்கு அறிவீர்கள். தொழில் வளர்ச்சியின் ஒவ்வொரு பிரிவும் தகவல் தொழில் நுட்பத்தால் பின்னிப் பிணைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றது. உலகப் பொருளாதாரத்தோடு இணைந்துவிட்ட ஒன்றாகத் தகவல் தொழில் நுட்பம் உருவாகி வருகிறது. தகவல் தொழில் நுட்பம் இல்லாத எந்தத் தொழிலும் முன்னேற்றம் அடையாத பழைய தொழிலாகவே இப்பொழுது கருதப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தகவல் தொழில் நுட்பம் விளங்கப்போகிறது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதனால்தான், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காகவும், அதன் பயன்கள் கிராமப் பகுதிகளிலும் ஊடுருவி, சாமானியர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், அரசு தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

தமிழ்நாட்டிலே ஆண்டுதோறும் படித்து வெளியே வரும் 23 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளில், 13 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மேலாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதன் தொடர்பான கல்வியைப் பெற்று இப்பொழுது வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கை யிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்றைய அளவில் தமிழகத்தில் 22 ஆயிரம் பேர்களுக்கு மேலாக மென்பொருளை வாழ்க்கைத் தொழிலாக Software Professionals - கொண்டிருக்கிறார்கள்;

தகவல் தொழில் நுட்பத்திற்கென்றே, சென்னை தலைமைச் செயலகத்தில் தனியாக ஒரு துறை, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையின்கீழ் 5-10-1998 முதல் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது.