பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

தொழில்துறை பற்றி

நன்றாக இல்லை. (பலத்த சிரிப்பு). இல்லாவிட்டாலும் கூட 111 வெட்டுத்தீர்மானங்களையும் எல்லோரும் திரும்பப் பெற்றுக் கொண்டு, மானியத்தை ஆதரித்து, கோரிய நிதியை அரசுக்குத் தர வேண்டுமென்று கேட்டு அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. பி. ஆர். சுந்தரம்.

திரு. பி. ஆர். சுந்தரம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் முன்பு பேசியபோது, இந்த அழகப்பா சிமென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான அரசினுடைய நிலத்தை, வேறொரு பினாமி கம்பெனிக்கு 100 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார்கள் என்று கூறினேன். அதனுடைய மதிப்பு 2,000 கோடி என்று கூறினேன். அதை மாற்றி 2,000 இலட்சம், அதாவது 20 கோடி என்று பதிவேட்டில் பதிந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்கள் பேசும்போது ராசிபுரம். . . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அது ஒன்றுக்கு மட்டும்தான் என்னிடம் அனுமதி வாங்கினீர்கள். அதோடு உட்காருங்கள். நீங்கள் கேட்ட அனுமதியைக் கொடுத்தேன். அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். (குறுக்கீடு). நீங்கள் பேச்சிலே ஏதோ தப்பாக 200 கோடி, 20 இலட்சம், 2,000 கோடி என்று சொல்லிவிட்டு, அதை மாற்ற வேண்டுமென்று சொன்னீர்கள். அனுமதி கொடுத்துவிட்டேன், மாற்றிவிட்டீர்கள். இனிமேல் உட்காருங்கள்.