பக்கம்:தொழில்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

தொழில்துறை பற்றி

திரு. சி. ஞானசேகரன்; "வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், செய்யாறு கூட்டுறவுச் சர்க்கரை ஆலையின் சக்கைகளிலேயிருந்து அதிக மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க” – அவர் சக்கையைக் கூட விடமாட்டார்! (சிரிப்பு). அதையும் தினந்தோறும் இந்த அவையிலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்களெல்லாம் அறிவீர்கள். அவர் கேட்டு இல்லையென்று சொல்ல முடியுமா? எனவே, அதைப்பற்றி நிச்சயமாகக் கவனம் செலுத்தப்படும்.

திரு. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள்; "இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்போடு C.I.I-இணைந்து, தொழில் திறன் மேம்பாட்டு - Skill development - மையங்களை மாவட்ட அளவில் உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க,” என்று கேட்டிருக்கிறார். நான் மீண்டும் சொல்கின்றேன். தொழிற் கொள்கை விரைவிலே வகுக்கப்பட இருக்கிறது. ஆகவே, இது கவனத்திலே கொள்ளப்படும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

து

திரு. டி. ஜெயக்குமார், ராயபுரம்; “வடசென்னையிலே உள்ள எண்ணூர் பகுதியைப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் பட்டு, இதுவரை இப்பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.” அம்மா காலத்திலேகூடவா? (சிரிப்பு). (குறுக்கீடு). கவலைப்படாதீர்கள், அமைத்துவிடலாம். “வேலை வாய்ப்பைப் பெருக்குகின்ற வகையில், வடசென்னை மக்கள் பெரிதும் பயன்படக்கூடிய வகையில், இப்பகுதியில் Special Economic Zone உடனடியாக அமைக்க வேண்டி அவசியம் குறித்து விவாதிக்க,” என்று கேட்டிருக்கிறார். நிச்சயமாக அதுவும் கவனிக்கப்படும், அவர் மகிழத்தக்க அளவில். (மேசையைத் தட்டும் ஒலி).

செங்கல்பட்டு திரு. கி. ஆறுமுகம் அவர்கள்; “திருக்கழுக் குன்றம் வட்டத்தைத் தொழிலில் பின்தங்கிய பகுதியாக அறிவித்து, தொழில் தொடங்குவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் 25% மானியம் வழங்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க,” என்று கேட்டிருக்கின்றார். அதுவும் கருத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் (மேசையைத் தட்டும் ஒலி).