பக்கம்:தொழில் வளம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத் தொழில்

201


என்னும் அளவுக்குச் செயலாற்ற வேண்டும். சில ஆண்டுகளுக்குமுன் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்கள் ஓராண்டு கிராமப்பணி செய்த பின்பே படிப்பு முடிவு பெற்றதாகக் கொண்டு பட்டம் வழங்கவேண்டும் என்ற உணர்வும், அதற்கேற்பத் தொழிற்படு சாத்தியக் கூறுகளும் உண்டானதறிவோம். எனினும் அது இன்று பேசப்பெறவில்லை. ஒரு வேளை செயலாற்ற வேண்டியவர்களையே அது பாதித்து விட்டதோ என மக்கள் எண்ணுவது உண்மையோ என நினைக்கவேண்டியுள்ளது. எனவே அரசாங்கம் தன் நிலையிலிருந்து இரங்கி அவலமுற்று வாடும் கிராமமக்களின் தேவைகளை முதலில் நிறை வேற்றவேண்டும். அப்போதுதான் உயிர் காடியாகிய பயிர்த்தொழில் வளம்பெறும்.

கிராமங்களிலுள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகள் போக்கப் பெறவேண்டும். அதற்கெனச் சட்டசபைகள் வெறும் சட்டங்களைச் செய்வதோடு அமையாது ஒவ்வோர் ஊரிலும் அவற்றைச் செயல்படுத்த முன்னிற்க வேண்டும். பெருஞ் சீர்திருத்தங்களைச் செய்ய முதலில் பல இடர்ப்பாடுகளும் எதிர்ப்புகளும் தோன்றுவது இயற்கையே. எனினும் எதுவரினும் அஞ்சாது எல்லாத துறைகளிலும் செயலாற்றிவரும் தமிழ்நாட்டு அரசாங்கம் இத்துறையில் இன்னும் சற்று அதிகக் கவனம் செலுத்திப் பாடுபட்டுக் கிராமமக்களின் வாழ்வையும் வளத்தையும் பெருக்கி அவர்வழி தமிழ்நாட்டில் பழங்காலக் தொட்டுப் போற்றி வளர்த்த-இன்றும் உயிர் நாடியாக இருக்கின்ற-உழவுத் தொழிலை வளர்த்துத் தானும் வளர்ந்து சிறப்படைய வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/204&oldid=1381332" இலிருந்து மீள்விக்கப்பட்டது