பக்கம்:தொழில் வளம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வின் தேவை

25


தொழில்வளமே இந்த இருபதாம் நூற்றாண்டின் உருக்காலைகள் அத்துணைக்கும் வித்திட்ட ஒன்று. எனவே அந்த முதன் மனித இனத்தவர் யாவராயினும்– அவர் இன்று இல்லையாயினும் - அவர் வாழ்ந்த காலம் நோக்கி-தெரிந்தால் திசை நோக்கி-இன்றைய மனித இனமே வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. அதே நிலையில் அவன் செம்பையும் பல ஆயுதங்களாக ஆக்கிப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான். இந்த இரும்புச் செம்புக் காலங்களில் அவனுடைய தேவை சற்று அதிகமாகவே வளர்ந்திருக்க வேண்டும் என்பது துணிவு.

இந்தப் பிந்திய வரலாற்றுக் காலங்களாகிய செம்பு இரும்புக் காலங்கள் வரை அவனுடைய தேவை ‘உணவோடுதான் நின்றதா?’ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நன்றாக ஆராயின் அவன் தேவை சற்று விரிவடைந்திருக்க வேண்டுமென்பது நன்கு புலனாகும். உணவு மட்டுமன்றி உடையும் அவனுடைய அடிப்படைத் தேவையாக அமைந்துவிட்ட காலம் அது விலங்கொடு விலங்காக வாழ்ந்த காலத்தில். வேண்டுமாயின் அவன் தன் உடலை மறைக்க வேண்டுமென்ற உணர்வேயில்லாது வெறும் உணவை மட்டும் தேடி அலைந்திருப்பான். ஆனால் மற்றைய மனிதரொடு அவன் சேர்ந்து வாழத் தொடங்கிய அந்த இரும்புச் செம்புக் காலங்களில் தன் உடலை மறைக்க வேண்டுமென்ற உணர்வு அவன் உள்ளத்தில் அரும்பி இருத்தல் இயல்பேயாகும். அந்தக் கால மனிதன் தன்னை விலங்கினும் வேறாக உணரத் தொடங்கிய வேளையும் அதுவாகும். எனவே உடலை மறைத்து மானத்துடன் வாழ வேண்டும் என்ற உணர்வு அவன் உள்ளத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/28&oldid=1381365" இலிருந்து மீள்விக்கப்பட்டது