பக்கம்:தொழில் வளம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில் வளமும் பொருளாதாரமும்

331



வரவழைத்து, ஆக்கப்பணிக்கு ஆவன செய்து வழி கோல வகை காணவேண்டிற்று. (Mr. A. Abbott and Mr. S. H. Wood}. அவர்கள் ஆய்ந்து காலம் கடத்தாமல் 1937 லேயே தம் கருத்தைத் திருத்தமாக வெளியிட்டு விட்டனர்.

ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர் உள்ளங்கள் நூல்களைத் துருவித் துருவி இளைப்பதைக் காட்டிலும் அவர் தம் இயற்கை வாழ்வையும் வளத்தையும் ஒட்டியும் சுற்றுச் சூழலின் அடிப்படையிலும் ஆரம்பக் கல்வி அமைய வேண்டும் என்று காட்டினர்.

கூடியவரையில் இந்திய நாட்டு மொழிகள் அனைத்தும் அவ்வவ் வட்டாரங்களில் பயிற்று மொழியாகக் கல்விக் கூடங்களில் இருக்க வேண்டுமெனவும், ஆங்கிலம் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் கட்டாய மொழிப் பாடமாக இருக்கவேண்டுமெனவும் கூறினர்.

தொழில் வாணிபத் துறைகளில் விருப்பமுள்ளவரையும் ஆற்றல் உள்ளவரையும் கல்வி கற்பதற்கு இடையிலே, கல்வித்துறைக்கு மாறுபாடற்ற வகையிலே, நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கு வேறுபடா வகையிலே, வற்புறுத்தா முறையில் அவ்வத்துறையில் படிக்க வைக்கலாமென்று கூறினர்.

ஒவ்வொரு மாநிலமும் தத்தம் சூழலுக்கும் மூலப்பொருள்களுக்கும் பிறநிலைக்ளுக்கும் ஏற்ப இத்தகைய தொழிலமைப்புக்களை மேற்கொண்டு அவற்றுள் அவர்களை எம்முறையில் இடர்ப்பாடில்லாதபடி செயல்படுத்தமுடியுமோ அப்படிச் செய்யவேண்டுமென்றனர்.

தொழில் துறையாளரும் வணிகத் துறையாளரும் இந்தவகையில் கல்வி முறையாளருடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும் நாட்டில் இத்துறையில் வரையறுத்த ஒற்றுமை நிலவவேண்டு மெனவும் வற்புறுத்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/334&oldid=1381946" இலிருந்து மீள்விக்கப்பட்டது