பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ராஜப்பாவின் வெற்றி



திருநகரின் முக்கியமான புள்ளிகளில் ஒருவர் ராஜப்பா. ஊராரின் கவனிப்புக்கு உரிய, பலரது பேச்சுக்கும் பொருளாகத் திகழ்ந்த, நபர்களில் தனிச் சிறப்பு உடையவர் அவர்.

அப்படி விசேஷச் சிறப்புக்கு உரியவராகத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டவர் அவர்.

அவருடைய ஆரம்பகாலப் பெயர் நடராஜன் என்றிருந்தது. அதைக் கூட ஸ்டைலாக நட்ராஜ் என்று அவர் ஆக்கிக் கொண்டிருந்தார். ஆதியிலேயே, அப்புறம் வீட்டாரும் உறவாரும் ஊராரும் அன்பாய், பிரியமாய், சுருக்கமாய் அழைத்து வந்த ராஜா என்பதையே தனது பெயர் எனப் புழக்கத்தில் விட்டிருந்தார், கொஞ்ச காலம்.

அதன் பிறகு, அவரது வியப்புக்கும் அபிமானத்துக்கும் இலக்காகியிருந்த நாடகச் சக்கிரவர்த்திகளும், நாடக கேசரிகளும், அப்பா என முடியும் பெயர்களைக் கொண்டிருந்ததால் கிட்டப்பா, செல்லப்பா, சுந்தரப்பா என்ற மாதிரி- அவரும் தன் பெயரை ராஜப்பா என்று திருத்திக் கொண்டார்.

அதற்கு மேலும் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் எனும் ஆசை அவரைப் பிடித்து ஆட்டிவைக்காததால் அவருக்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது.

தோ-8