பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 158

பஸ் புறப்பட்டது. இந்த ‘வழித்தடம்’ பஸ்சில் பயணிகள் கூட்டமும் இல்லை. மிக வசதியாக இருந்தது. பஸ் பல மணிநேரம் ஓடிய பிறகே முடிவான ஊரைச் சென்றடையும் என்றும் அவர் தெரிந்து கொண்டார். அது அவருக்கு மனநிறைவு தந்தது.

பயணத்தை சிவகுரு ரசித்தார். பஸ் நின்ற ஊர்களின் பெயர்களை ஆர்வமாக கவனித்தார். ஏறி இறங்குகிற பயணிகளையும் பார்த்தார். பல மணி நேரத்திற்குப் பிறகு பஸ் கடலோர ஊரை சென்றடைந்தது. பஸ்சில் வந்த பலரும் கீழே இறங்கினர். சிவகுருவும் இறங்கினார். பஸ் திரும்பி நின்றது. காத்து நின்ற சில பேர் அவசரம் அவசரமாக அதில் ஏறினார்கள். பஸ் உடனே புறப்பட்டு விட்டது.

சிவகுரு சுற்றுமுற்றும் பார்த்தார். சாதாரண ஊர் தான். பஸ் நின்று கிளம்பும் இடத்தில் டிக்கடையோ, பீடி- சிகரெட் வகையரா விற்கிற பெட்டிக்கடையோ எதுவும் இல்லை.

தெரு எனத் தோன்றியதில் அவர் நடந்தார். பலதரப்பட்ட வீடுகளின் வரிசை. ஒரு இடத்தில் ஒரு கோயில், பெரிதாகத்தான் இருந்தது.

அவர் சுற்றித் திரிவதற்கு தெருக்கள் பல இல்லை அந்தச் சிற்றூரில், இருந்த சில தெருக்களிலும் கண்டு களிப்பதற்கு விசேஷமாக எதுவும் இல்லை. அவர் கோயிலுக்கு போனார்.

கோயில் பெரிதாக இருந்ததே தவிர, குறிப்பிடத்தக்க சிற்பங்களோ, கலை வேலைப்பாடுகளோ அங்கு இல்லை. சிவகுரு சிறிது நேரம் அங்கே நின்றார். பிறகு, கடலின் பக்கம் போனார்.