பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 ★ வல்லிக்கண்ணன்


இளைஞனின் சாமர்த்தியத்தை வியந்து பாராட்டத் தயாராக இருந்தார்.

ஆனால் அவன் அவரிடமோ அல்லது வேறு எவரிடமிருந்தோ, பாராட்டுரைகளையோ அன்றி நற்சான்றிதழ்களையோ எதிர்பார்த்ததாகத் தெரிய வில்லை. அவனது நிலையில் அவன் பரிபூரண திருப்தி கொண்டவனாகவே காணப்பட்டான்.

அவனுக்கு முப்பது வயசுக்குள் இருக்கலாம். சிரித்த முகமும் சிங்காரத் தோற்றமுமாய், வசீகரனாய், உரையாடல் திறமை மிகுந்த இனியனாய் விளங்கினான். உயரமில்லாது, எனினும் குள்ளம் என்று சொல்லப்பட வேண்டிய அகாவிலும் இராது, ‘தண்டியும் சதையுமாக’ இல்லாமல், ஆயினும் மெலிந்த உடல் என்று கொள்ளப்பட வேண்டிய தன்மையிலும் இராமல், கவலையற்ற. போஷாக்கு நிறைந்த வளப்பமான வாழ்க்கை முறையை விளம்பரப்படுத்துகிற தோற்றம் பெற்றிருந்தான். ஸ்டைல் என்பதை உரக்க எடுத்துச் சொல்லும் புதிய டிசைன்கள், அடித்தமான வர்ணங்கள்,கோணங்கித்தன அமைப்புகள் எதுவும் அவனது ஆடைகளிலோ அலங்கரிப்பிலோ தென்படவில்லை. அவனுக்கு அமைவாகவே எல்லாம் இருந்தன.

இவை எல்லாம்தான் செல்வநாயகத்தை அவன் பால் விருப்பம் கொள்ள வைத்தன. அவன் பெயர் ராஜன் என்பதையும் கேட்டறிந்து கொண்டார். அவன் தனது கோரிக்கையை மனம் உவந்து ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு.

‘உங்களுக்கு மிக முக்கியமான அலுவல்கள் எதுவும் இப்போது இல்லை என்று தெரிகிறது. எனக்கும் உதவி தேவைப்படுகிறது. எனது சொந்த விவகாரங்கள் சிலவற்றை நான் ஒழுங்குபடுத்தியாக