பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 ★ வல்லிக்கண்ணன்

நான் தடையாக இருக்க விரும்பவில்லை. நான் திடீர்னு உங்களை அனுப்பிவிடுவதாக நீங்கள் எண்ணக் கூடாது. மூன்று மாத அலவன் சாக ஆயிரத்தைந்நூறு ரூபாய், போனஸாக ஒரு ஐநூறு ஆக இரண்டாயிரம் இந்தாருங்கள். உங்கள் எதிர்காலம் வளமுடையதாக அமையட்டும்” என்று வாழ்த்துரையும் பணமும் அளித்து, கைகுலுக்கி, விடைகொடுத்து அனுப்பினார்.

“இனிமேல் இவன் இங்கே இருப்பானேன்? அவள் உள்ளத்திலும், அப்புறம் பிள்ளை பிறந்த பிறகும், வீணான உணர்ச்சிக் குழப்பங்களுக்கு வகை செய்வதற்கா? பிசினஸ் ஏற்பாட்டில் சென்டிமெண்டல் நான் சென்சுக்கெல்லாம் இடமே கிடையாது” என்று பணநாதர் மனத்திருப்தியுடன் எண்ணிக் கொண்டார்.

ராஜன் வசந்தாவிடம் தனிமையில் விடை பெற்றுக் கொண்டான். ‘உன் நினைவு என்றும் இருக்கும்!’ என்றான்.

“எனக்கும்தான் என முணுமுணுத்தாள் அவள். இருந்தாலும், என் நினைவாக இது எப்பவும் உங்களிடமே இருக்கட்டும்” என்று கூறி, தன் கழுத்தில் கிடந்த மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றை எடுத்து, அன்பளிப்பாக அவனுக்குத் தந்தாள். தாயாகப் போகும் திருப்தி அவள் முகத்திலும், உடலிலும் தனி ஒளியோடு மினுமினுத்துக் கொண்டிருந்தது.

அந்த அழகைக் கடைசி முறையாகக் கண்டு களித்து விட்டு வெளியேறிய ராஜனின் மனம் “எல்லாருக்கும் திருப்தி தரும் ஏற்பாடாக இது முடிந்திருக்கிறது. சந்தோஷமான விஷயம் இல்லையா அது? எனக்கு என்ன! வாழ்க்கையே ஒரு பிசினஸ், அதற்கு வெற்றி தரும் பெரிய சந்தை இந்த மனித சமூகம்” என்று நிறைவோடு முடிவுகட்டியது.