பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178வல்லிக்கண்ணன்


அவன் போன நகரில் அவனுக்கு உறவினர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் தங்கினான். அவரே அவனுக்கு ஒரு வேலையும் தேடிக் கொடுத்தார்.

கொஞ்ச காலம் அவன் ஒழுங்காக இருந்தான். அப்புறம் காலம் அவனை சும்மா இருக்கவிடவில்லை.

அந்த உறவினரின் மகள் மைதிலிக்கு பதினைந்து வயசாகியிருந்தது. அவள் பள்ளிக் கூடம் போய் வந்து கொண்டிருந்தான். அப்படி அவள் போகிற அழகும், வருகிற ஜோரும் ரகுராமனை கிறங்கடித்தன.

மைதிலி அவனிடம் சகஜமாகப் பழகினாள். சாதாரணமாகப் பேசிச் சிரித்தாள். பாடங்களில் சந்தேகம் கேட்டாள். தன் சிநேகிதிகள் பற்றி சிரிக்கச் சிரிக்கப் பேசினாள்.

ஒருநாள் ரகுராமன் அருகில் நின்று அவள் பேசிக் கொண்டிருந்த போது, அவன் அவளுடைய கையைப் பிடித்து ஆசையோடு வருடினான். 'மைதிலி' உள்ளதை சொல்லிப் போடு. உனக்கு என் மீது லவ்வு தானே?' என்று கேட்டுவிட்டான்.

மைதிலி இதை எதிர்பார்க்க வில்லை. அவள் முகம் குபிரென ரத்த ஒட்டம் பெற்றுச் சிவந்தது. தலைகுனிந்து நின்றாள்.

அது சம்மதத்தின் அடையாளம் என்று அவனாகவே எண்ணிக் கொண்டான் ரகுராமன், 'நாம் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். இப்பவே இல்லை. உன் படிப்பு முடிந்த பிறகுதான். நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம். நான் ராமன். நீ மைதிலி' என்று கொஞ்சுதலாகப் பேசினான். அவன் கன்னத்தைத் தடவக் கைநீட்டினான்.