பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தோழி நல்ல தோழிதான் ★ 17

பயிர் வளர்ந்து பலன் தருவதற்கு அவசியமான மழை வரத்தான் செய்யும் என்று நம்பிக்கையோடு வானத்தைப் பார்த்தபடி இருந்தார்கள்.

வானம் பொய்த்தது. வறட்சி பரவியது. பயிரிட்டவர்களின் நம்பிக்கை கருகியது. அவர்கள் வாழ்வில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்சப் பசுமைகூடத் தீய்ந்தது.

கிழவனும், கிழவியும் கடும் வெயிலில் வதங்கினார்கள். வாழ்க்கைச் சூட்டினால் உருக்கி எடுக்கப்பட்டார்கள். அவர்கள் வயிறு ஒட்டியது. உடல் வெறும் எலும்புக்கூடு ஆயிற்று. சாப்பாட்டுக்கு வழியே இல்லை. எத்தனை காலத்துக்குத்தான் கடன் வாங்கிக் கடன் வாங்கி நாளோட்ட இயலும்? இல்லை. எவ்வளவு நாட்களுக்குத்தான் அண்டை அயலார் அவர்களுக்குக் கடனுக்குமேல் கடன் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்? அப்படிக் கடன் கேட்கிறபோதெல்லாம் தாராளமாக இவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு அவர்களிடம்தான் என்ன வசதி உண்டு?

ஆகவே, பட்டினி நிலைமைதான். இந்தப் பயங்கரமான அனுபவத்திலும் கிழவனுக்குத் துணை கிழவிதான். அவளுக்குத் துணை அவனே.

மழை வரும்; இன்று பெய்யும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பதும், நாள் முடிவில் ஏமாறுவதும், பெருமூச்சு விட்டுப் புலம்புவதும் அவர்களுடைய நித்திய நியதி ஆகிவிட்டது.

அன்றும் அதே நிலைதான்.

மழை வரும் என்று எண்ணினார்கள். வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் வராதா என்று ஏங்கினார்கள்.