பக்கம்:நக்கீரர்.djvu/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை.

கள் இரண்டொன்றே யுள்ளன. அவையும் தக்காங்கு விரித்தெழுதப்பட்டில. இரண்டொரு புலவர்களைப் பற்றியே சற்றுவிரிவாக எழுதிய புத்தகங்க ளுள்ளன. ஆகலின் தமிழ்ப் புலவர் பலருடைய வரலாறுகளையும் விரித்தெழுத வேண்டுமென்னும் ஆசையாற் றூண்டப்பட்டு, நல்லிசைப் புலவர்களின் பெருமைகளை உள்ளவாறு விளக்குதற்குச் சிறிதும் தகுதியில்லாத யானும் நக்கீரனாரைப்பற்றி முதலில் எழுதி வெளியிடத் துணிந்தேன். இஃது ஐந்தாறு வருடங்களின் முன்பே எழுதப்பெற்றதாகலின், 1915-ஆம் ஆண்டில் நான் எழுதி வெளியிட்ட ஓர் சிறு புத்தகத்திலும் இதனைச் சுட்டுமாறு நேர்ந்தது. எனினும், இப்பொழுது, முன் எழுதியிருந்தவற்றிற் சிலவற்றை மாற்றியும், சில சேர்ந்தும் எழுதியுள்ளேன். நான் எழுதியவற்றிற் பிழைகள் பல இருப்பினும், உண்மையை ஆராய்ந் தெழுதவேண்டுமென்னும் என் நோக்கத்தை மதித்து, அறிவுடையோர் ஆதரிப்பரென்னும் துணிபுடையேன்.

என்பாற் பேரன்புடையவர்களான என் பழைய மாணாக்கர்கள் இதனை வெளிப்படுத்துமாறு முன்வந்து உதவி புரிந்தார்கள். அவர்கள் எவ்வகை நலனும் பெற்றுப் பிறர்க்கென முயலும் பெற்றியராய் நெடிது வாழுமாறு எல்லாம் வல்ல முழு முதற் கடவுளின் றிருவருளைச் சிந்திக்கின்றேன்.

இது விரைவில் அச்சிடப்படுதற்குப் பெரிதும் உதவிபுரிந்த உண்மைத் தமிழன்பரான திருவாளர் s. அற்புதசாமி உடையார், B.A., L.T., அவர்களுக்கும், இதனை வெளிப்படுத்துதவிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்க்கும் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுளேன்.

மு.வே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/7&oldid=1092747" இலிருந்து மீள்விக்கப்பட்டது